கல்லூரி கவிதை | College kavithai
ஒற்றை புத்தகம் கையில் எடுத்து நடை போட
ஒரு வீரம் பிறக்கும் அடி மனதில்!
ஒட்டு மொத்த புத்தகமும் எடுத்து வர
ஒரு வித தயக்கம் பிறக்கும் மனதில்!
எதுவும் தெரியாமல் தேர்வறையில் அமர்ந்து
ஏதேதோ எழுதி விட்டு நாங்கள் வெளி வர
செமஸ்டர் வழக்கிற்கு தீர்ப்பு கிடைக்கும்
அடுத்த ஒரு சில மாதங்களில்!
மனம் சிறிதாக சோகம் காணும்
மதிப்பு இல்லாத எண்கள் மதிப்பெண்களால்!
அரியர் இல்லா மனிதன் அரை மனிதன்
சோகமே மாறும் கல்லூரி பழமொழியினால் !
வகுப்பறையின் இருக்கையில் பாதம் பதித்து
அங்கும் இங்குமாய் ஓடி விளையாடி
ஓய்வெடுத்து கடைசி இருக்கையில் அமர
கால் உடைந்து ஓய்வு எடுக்கும் முதல் இருக்கை!
தோள்மேல் கை போட்டு நாங்கள் வலம் வர
வழி விட்டு ஒதுங்கும் சோகங்கள்!
கூடி நின்று அரட்டை அடிக்கும் நேரங்கள்
வாடாத மல்லிகையாய் நட்பு அளித்த வரங்கள்
எரிபொருள் நிரப்பிய இரு சக்கர வாகனம்
எங்களது விளையாட்டுப் பொருள்!
நட்பைத் தவிர எந்த சொத்தும் இல்லை
எங்களது கல்லூரி வாழ்க்கையில்!
வெண் சோறு தனைக் கொட்டி குழி பறித்து
குழம்பு தனை அதில் ஊற்றி
உணவுக்கு உருண்டை உருவம் இட்டதில்லை
நாங்கள் எல்லோருமே சாப்பாடு ராமன்கள்!
ஓரறிவு மரங்கள் ஒற்றைக் கால் தவம் புரிய
ஆறறிவு காளைகள் ஐந்தறிவாய் மாறிவிட
மரக் கிளையில் மனிதக் குரங்காய் கல்லூரியில்
மட்டற்ற மகிழ்ச்சி நாங்கள் கண்டோம்!
மூன்று வருட காகித காலண்டர் நாட்கள்
குப்பை தொட்டி நோக்கி பயணம் முடிக்க
குட்பை சொல்ல கட்டாயம் ஏற்பட
விழியோர கண்ணீர் சிந்தி விடை பெற்றோம்!
பிறவிப் பயன் அடைந்து விட
கல்லூரி வாழ்க்கை பெற்றேனோ?
இமை மூடாமல் கண்ணீர் சிந்துகிறேன்
கல்லூரி வாயிலை கடந்து செல்கையிலே!