கர்ப்பம் கவிதை | Karppam kavithai
பூ மொட்டாய் மழலை உறவொன்று
என் இனம் தழைக்க வந்ததின்று!
வயிற்றுத் தசை இனி பெரிதாகும்
மழலை ஒன்று அங்கே உதயமாகும்!
இரவும் பகலும் இனி கவிதையாகும்
வளரும் மழலையால் நாளும் இனிமையாகும்!
சுரக்கும் உமிழ் நீர் இனி வாந்தியாகும்
சுவை தந்த உணவுகள் எதிரியாகும்!
இவள் மூச்சு இனி தாய்மை பேசும்
இவன் மூச்சு இனி தந்தை சொல்லும்!
தமிழுக்கு புனிதம் அம்மா எழுத்தாம்
வாழ்வில் இனி இது இவள் உயிரெழுத்தாம்!
கடைவீதி பொம்மை மழலையாய் மின்னும்
பத்து மாதங்கள் இனி பல வருடமாய் நகரும்!
எட்டி எட்டி மழலை பாதம் உதைக்குமாம்
ஏங்கி நாம் இருக்க மீண்டும் உதைக்குமாம்!
ஈருடல் ஓருயிராய் வாழ்ந்தோம்
இனி மூவுடல் ஓருயிராய் வாழ்வோம்!