ரயில் பயணம் | Rayil payanam
வெளியூர் பயணம் நான் செல்ல
தூண்டி விடுவாய் என் நினைவுகளை!
நகராத இரு கோடு தண்டவாளத்தில்
மைல் வேகத்தில் நீ பறப்பாய்!
முன்பதிவில்லா பெட்டியில்
முன்பதிவு செய்யபட்டிருக்கும்
எனது கடந்த கால நினைவுகள்
முதல் காதல் முதல் கடைசி காதல் வரை !
உனக்கும் மூதாதையர் உண்டு-அது
என் சிறு வயது அட்டை ரயில்.
எரிபொருள் சக்கரம் இரண்டும் இல்லா
என் பட்ஜெட் பெரிய ரயில்!
உன்னோடு ஓடி வரும் மரங்களால்
உன்னை வீழ்த்த முடிவதில்லை
ஆங்கங்கே நின்று செல்லும் நிலையத்தில்
விட்டுப் பிடித்து தொடரச் சொல்வாய்!
அடம் பிடிக்கும் செல்ல குழந்தைகளை
ஜன்னலோர இருக்கையில் அமர்த்தினால்
அன்னை மடி அதுவென ஆர்பரிப்பர்.
குழந்தைப் புன்னகை ரயிலுக்குச் சமர்ப்பனம்!
பெரிய சத்தம் பெரிய வேகமாய் நீ செல்ல
சிறய சிகப்பு விளக்கு உன்னை மயக்கும்!
புத்தி மயங்கிய உன்னை எழுப்ப
பச்சை விளக்கு பளிசென்ன ஒளிரும்!
வளைந்து செல்லும் தண்டவாளத்தால்
வளைவு நெளிவு உனக்கு அழகு
அதை வடித்து கொடுத்த தண்டவாளம்
கவிஞனுக்கெல்லாம் தலைவன் ஆனான்!
என் வருகை என் அம்மா எதிர்பார்க்க
என் அன்னைக்கு அன்னை நீயானாய்!
நல்ல படியாய் சேர்ந்து விட்டேன்
நற்பெயர் எல்லாம் நீ அடைவாய்!
நான் பயணம் செய்தது என்னவோ
முன்பதிவு இல்லா பெட்டிதான் - ஆனால்
எனக்கும் ரயிலுக்குமான உறவு
முன் ஜென்மத்தில் பதிவானவை!