காலண்டர்...
Calendar kavithai |
காலம் என்னும் காலண்டர்
தினமும் ஒரு கிழமையை
உதிர்க்கிறது.
காகிதப் பூக்கள் என்பதால்
வண்டுகளும் சீண்டவில்லை.
தென்றலும் வருடவில்லை.
மானுடனின் வியாபாரப் புத்தி
உன்னையும் விட்டு வைக்கவில்லை.
விளம்பரத்தை உன்னில் பதித்தான்.
விளம்பரம் மட்டும் தானா?
சாதி, மதம் , கட்சி ........
உழைப்பும்
உணர்வுகளும்
சிந்தனைகளும்
தீர்மானிக்கதக் காலத்தை
ராசி பலன் சொல்லிற்று.
கன்னி ராசிக்கு
இன்று உற்சாகமாம் !
மூடப்பட வேண்டிய மூடநம்பிக்கைகள்
மூடப்படாமல் இருக்கிறது உன்னுள்.
எமகண்டம் முதல் சூலம் வரை.
நீ என்ன செய்வாய் ?
சாஸ்திரங்கள் உன் தோழன் ஆயிற்றே!
சூலம் - கிழக்கு ....
உனக்கு மட்டும்
இது விதி விலக்கு.
கடிகாரம் என்ற பெயரில்
உன் தமையனும் அங்கே
தொங்க விடப்பட்டிருக்கிறான்.
சுவரில் தொங்கிக் கொண்டே
மானுடர்களின் வாழ்க்கையை
நொடிக் கணக்கிலும்
நாள் கணக்கிலும்
ஆட்டுவிப்பது
உங்களுக்குக் கை வந்த கலை.
அமைதியாக மின் விசிறி காற்றில்
முனு முனுக்கும் நீ
என் காதலியின்
முனு முனுக்குக்கு இணைதான்.
காலத்தை உணர்த்துபவன்
என்பதால்தான் என்னவோ
உனக்கு மட்டும் விதி விலக்கு.
காலம் தாழ்த்திக்
காலையில் கிழிக்கப்படுகிறாய்.
இழந்த காலமும்
இழந்த உயிரும்
திரும்ப வராது
வருடத்தின் முதல் இதழிலும்
காலம் பொன் போன்றது
கடமை கண் போன்றது
உன் கடைசி இதழிலும்
எழுதப்பட வேண்டிய
மானுட வாசகங்கள்!