பள்ளி தோழனுக்கு .....
Schoomate kavithai |
அன்று ஒரு நாள்
பள்ளிக்கூட வேப்ப மர நிழல்
மதிய உணவு இடைவேளை
பகிர்ந்தளிக்கப்பட்ட உணவுகள்
பரிமாறப்பட்ட பாசங்கள்(நட்பு).
ஆம் ! உன் பிறந்த நாளை முன்னிட்டு
என் ஆழ்மனதில் எழுந்த நினைவுகள்.
நம் நட்புக் கூட்டங்கள்
ஒன்றாகச் சேர்ந்து
கேலியும் கிண்டலுமான
கதை பேசி
கழிந்த காலங்கள் அவை..
இடை இடையே
இயற்பியலும் வேதியலும்.
பல சான்றோர்களின்
நூல்களைப் படித்திருக்கிறேன்
மனித ஜென்மம் பாவம் என்று.
உன்னுடன் பழகிய பின்பு - நான்
ஏற்றுக் கொள்ளாத வார்த்தைகள் அவை.
கடந்த காலம் திரும்ப வராது
பல முறை பேசிய
தந்தை பேச்சு உணர்த்தவில்லை.
அன்று ஒரு நாள்
பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது
நானும் எனது நண்பனும் என்று
ஆரம்பிக்கும் எனது உதடுகள்
உள் மனதுக்கு உணர்த்தியது
கடந்த காலம் என்னவென்று.
உன் நினைவுகள்
என் ஆழ் மனதில்
சற்று ஆழமாகத்தான்
புதையலாக
புதைக்கப்பட்டிருகிறது.
புதையலை தேடி
எனது பயணம்
இன்னமும்
தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
அன்று நாம் சாப்பிட்ட
கைகளின் ஈரம்
இன்னமும் காயவில்லை
என்பதால்தான் என்னவோ
இன்று வரை
உன்னைச் சந்தித்து
கை குலுக்கவில்லை.
நமது பள்ளிக்கூட
வேப்ப மரத்து நினைவுகளோடு
உன்னை மனமார வாழ்த்துகிறேன்.
என் உயிர் தோழனுக்கு
பிறந்த நாள் வாழ்த்துக்கள்....