கணினி துறையின் பணி சுமை

கணினி துறையின் பணி சுமை

Computer
Pani Sumai

பணி சுமைகள் கூட 
சுகங்கள் என்று 
உதட்டளவில் உச்சரிக்கும் 
கணினி வல்லுநர் நான்!

கணினியை நினைத்து 
கழனியை மறந்தேன்.
இன்று அவை தரிசு நிலங்களாய்!

கட்டிலில் படுத்து 
கனவு கூட கண்டதில்லை.
கணணியை தொட்ட நாள் முதல்!

கவிதை எழுத வேண்டும் என்று 
கற்பனைகளுக்கு நேரம் 
ஒதுக்குகிறேன்!
இந்த மாதம் 
அரசு விடுமுறை வருமா?

பணி சுமையின் காரணமாக 
என் கற்பனைகளுக்கு 
பகலில் நேரமில்லை!

சரி, இரவுதான் வருகிறதே என்று 
கற்பனை சிறகை பறக்க விட்டால் 
மின்னஞ்சல் எனும் தூதுவன்
சிறகில்லாமல் பறந்து வருகிறான்.
அயல் நாட்டிலிருந்து!

சிறகுகள் ஒடிக்கப்பட்டு 
எனது கற்பனைகளும்
கால்கள் உடைக்கப்பட்டு 
எனது பேனாவும் 
கணினி முன்பு மண்டியிட்டன!

இரவு தன் ஆடை கழற்ற
பகல் பிறக்கிறான்.
எனது வாழ்க்கை சுழற்சி 
ஆரம்பமானது.

உண்மையை சொல்லுகிறேன் 
எனது தலையில் சுமை அல்ல
இருந்தாலும் உணர்கிறேன்.
சுமைகளை சுமந்தது போல
கணணி துறையில்
சேர்ந்த நாள் முதல்!

திருமணங்கள் சொர்க்கத்தில் 
நிச்சயிக்கபடுகின்றன!
அது என்னமோ உண்மைதான்!

எனது திருமணமும் 
அங்குதான் நிச்சயிக்கப்படும் போல!

என் இரவுக்கு வெளிச்சம் தர 
நான் நிலவை தேடுகிறேன் 
எனக்கு வெளிச்சம் தர 
முன் வருகிறான் 
எனது கணணி திரை!
இரவினிலும் இவன் தொல்லை 
தாங்க முடிய வில்லை.

சிறு வயதில் 
பள்ளிக்கு செல்ல மறுத்தேன்.
என் அலுவலகமும் 
என் சிறு வயது பள்ளி கூடம்  தான்.
ஒரே ஒரு வித்தியாசம் 
அங்கு எழுத்து பலகை 
இங்கு விசை பலகை.

புயலையும் தாங்கும் பூக்கள் 
எங்கள் கணணி துறையில் ஏராளம்.
தழுவும் தென்றலில்
தலையாட்ட விரும்பும் 
பூவாக நான் இருக்க ஆசை!

நலம் விசாரித்த
அன்பு உள்ளங்கள்
இன்று தூரத்து சொந்தங்களாய்!

காலம் எனும் வேகமும் 
கணணி துறை எனும் வளர்ச்சியும் 
கண்கள் கூட இமைக்காமல் 
வேலை செய்ய கற்று கொடுக்கும்.

முகவரி எழுதாத
என் மூளை எனும் கடிதம் 
நிம்மதியை தேடி இன்னமும் 
பயணிக்கத்தான் செய்கிறது.

என்னோடு சேர்ந்து 
பல கடிதங்கள்.





Post a Comment (0)
Previous Post Next Post