இயற்கையின் சீற்றம்
மழைசாரலில் நனைந்திருக்கிறேன்
மனதை பறி கொடுத்திருக்கிறேன்
நதியின் வளைவுகள்
நங்கையிடம் கூட இல்லை
மாற்றம் கொடுத்து
மாற்றிக் காட்டியது
மழையும் மண் சரிவும்.
உத்தர்கண்ட் பற்றி எழுத
உவமையும்
உருவகமும் தேவையில்லை.
மரங்களை அழித்ததால்
மண்சரிவை ஏற்படுதினாயோ?
மலராமலே பிஞ்சு மொட்டுகளை
மண்ணில் பதித்தாயோ ?
மழலைச் செல்வமும்
மக்கட் செல்வமும்
மகத்தானதல்லவா ?
தொலைந்து போன உயிர்கள்
தொலைவிலா ? அருகிலா ?
தொலைக்காட்சி செய்தி கூட
தெளிவாகத் தெரிவிக்கவில்லை.
வெள்ளப்பெருக்கு
வெகு விமரிசையாய்
அடித்துச் செல்லப்பட்ட
அனைத்து வகை மரங்களோடு
அணிவகுப்பு யாருக்காக?
மிதந்து வந்த மரங்களும்
மாளிகைகளும் சொல்கிறது
மீண்டு வர வருடம் ஆகுமாமே?
கரையைத் தாண்டி நீ வர
கரைபுரண்டு வெள்ளம் ஓட
கலை இழந்து
கற்சிலையாய் நாங்கள்.
கற்காலத்தை நோக்கி நாங்களும்
கடல் அன்னையை நோக்கி நீயும்.
அரசியலை நம்பவில்லை
அன்னையே உன்னை நம்புகிறேன்
எங்கள் இயற்கை அன்னையே !
இனிமேல் வேண்டாம்
இது போன்றதொரு
வெள்ளப்பெருக்கும் மண்சரிவும்.