இன்றைய விவசாயி | Today Farmer
![]() |
Indraiya vivasaayi |
கழனியில் முளைத்த
களைய வேண்டிய
களைகளாய் கட்டிடங்கள்.
களைய முடியாமல்
இன்றைய விவசாயி!
சேறை சோறாக மாற்றும்
வித்தை தெரிந்து
விவசாயத்தில்
பாதம் பதிக்க முடியாமல்
இன்றைய விவசாயி!
தன்னிலை மறந்து
நண்பகல் வெயிலில்
கழனியின் நடுவில்
கலப்பைப் பிடிக்கும்
துணிவு இருந்தும்
துணிச்சல் இல்லாமல்
இன்றைய விவசாயி!
கழனியின் மகள்
நாற்று வளர்ந்து
பருவப் பெண்ணாய்
தலை சாய்க்கும்
நெற்கதிரை காண முடியாமல்
இன்றைய விவசாயி!
காலனின் குறிப்பறிந்து
விளைச்சல் கண்டவன்
மாறி வரும் கலியுகத்தால்
விவசாய வளர்ச்சி காணாமல்
இன்றைய விவசாயி!
மலடியின் கனவில்
ஒரு சுகப் பிரசவமாய்
விவசாயின் கனவில்
அமோக விளைச்சலாம்!
கனவு காணும்
இன்றைய விவசாயி!
கானல் நீரில் தாகம்
தணித்துக் கொண்டு
இன்றைய விவசாயி!
விளை நிலத்தின் அருமை
விலை போகும் நிலமாய்
விளைச்சல் தெரியாமல்
விவசாயத்தை வீழச் செய்த
வியாபாரப் பைத்தியங்கள்
மானுடப் பணப் பைத்தியங்கள்.
பைத்தியங்களை
திருத்த முடியாமல்
இன்றைய விவசாயி!