பூ முகமாய் கவிப் புன்னகை | Kulanthai Sirippu

பூ முகமாய் கவிப் புன்னகை | Kulanthai Sirippu
Child poet
Smile
உன் மழலை முகம் கண்ட பிற முகங்கள்
பிரம்மன் படைத்த அழகோ யென வருணிக்க
நாத்திகனும் ஆத்திகனாய் உரு மாறினான்!

ஏட்டில் எழுத மனம் நினைத்த கவிதைகள்
வீடு வாயில் நுழையும் முன் மறந்து விட
உன் இதழ் சிரிப்பால் நினைவுபடுத்தி விடுவேன்!

உன் போன்ற சிரிப்பு எவரிடமும் இல்லையென
நான் சிந்தித்து தெளிவு முடிவு பெறும் முன்
மீண்டும் ஒருமுறை சிரித்து விடுகிறாய்!

சுழலும் மின் விசிறி உன் சிரிப்பை தூண்டிவிட
சுழலுகின்ற பூமி ஆச்சர்யமாய் தெரியவில்லை
மின்விசிறிதான் ஆச்சர்யமென்று சொல்லி விடுவேன்!

சொந்தங்கள் எல்லாம் உன்னோடு விளையாட
உன்னோடு உன் பொம்மையாய் நான் விளையாட
எண்ணிய எண்ணம் ஈடேராமல் நொந்து விடுவேன்!

தியானம் என்பது மன அமைதி தரும் என்றால்
நித்திரை கொள்ளும் உன் பூ முகம் கண்டு
விழி திறந்தும் நான் தியானம் கொள்வேன்!

கவி எழுத மறுக்கும் பேனாவிற்கு எல்லாம்
உரிமை கொண்ட வார்த்தை இல்லா கவிஞன்
உன் முகம் கண்டால் கவி எழுதி விடுவான்!

அவ்வாறு உன் மழலை முகம் தினம் கண்டு
தினமொரு கவி எழுதும் உன் ரசிகன்
உன் முக அமைப்போடு உன் தந்தை நானானேன்!






Post a Comment (0)
Previous Post Next Post