மகள் அஞ்சலை அடுப்பங்கரையை மொழுகி விட்டு, வீட்டின் உள் கட்டுக்குள் புகுந்தவள், நிலா… நிலா… என் செல்லம் எழுந்துமா…, நேரமாச்சி என்றவள் தன் மகளின் தலையை வருடியபடியே அவள் சினுங்கும் அழகை ரசித்துக் கொண்டிருந்தாள். நேற்று மாலை இரட்டை சடையில் பிரிந்த ஒற்றை பின்னலுடன் சற்றே கசங்கிய கருநீலப் பாவாடையுடன் விழிகளை உருட்டியபடியே எழுந்தவளைஎன் செல்லம்ல போ போய் டீ வாங்கிட்டு வாங்க, என்று முகம் கழுவிட்டதும் தன் தாயின் முந்தானையில் முகம் துடைத்ததும் தூக்கு வாளியையும் ஐந்து ரூபாயையும் கையில் தந்தாள்.
நிலா நிலா ஓடி வா …
நில்லாமல் ஓடி வா… என்று, தன் பின்னால் வரும் சூரியனை பார்த்து பாடியவாறே இடது முக்குட்டு திரும்பி வலப்புறம் உள்ள டீக்கடையை நெருங்கினாள்.
டீக்கடை பெஞ்சில் அமர்ந்த பெருசில் ஒன்று,
என்னடி பேத்தி உம் பாட்டன் எங்க?...
தாத்த மேற்க்க போச்சி அதான் எங்க நிலத்தை அளக்கிறாங்கல அதான்.. விசார்ப்ப பாக்க போச்சி தாத்தா., என்று தெளிவாக தன் மழலையில் கூறியது, பெருசுகளின் அன்றைய விவாத மேடையானது.
ஆத்தா ரெண்டு டீ எனக்கு ஒரு பன்னு என்று சற்றே தடித்த பருமனான உடலுடனும் இருக்கும் மலர் ஆத்தாவிடம் டீயை வாங்கிக் கொண்டு பன்னை வாயில் கடித்தவாறு ஓடத் தொடங்கினாள்.