கவிதை - தேடிப்பார் - மேகமே

கவிதை

கவிதை!
இது
எண்ணங்களின் எழுத்து வடிவம் !
உணர்வுகளின் உருவம் !
நினைவுகளின் நிலையம் !
மற்றும்
கனவுகளின் காவியம் !!

தேடிப்பார்

கவிதையை முத்தமிட்ட
நட்சத்திரத்தின்
பெயர் கேட்டேன்
உன் கவிதையில்
தேடிப்பார்
எனச் சொல்லிவிட்டு
மறைந்து போனது

மேகமே

மேகமே
உன்னை யார்
என்ன செய்தார்கள்
இப்படி அழுகின்றாயே !
ஆனால்
நீ அழுதால் மட்டுமே
நாங்கள் சிரிக்க முடியும் !

கார் காலம்

கார் காலம்!
இது பூமியுடன் மழை சங்கமிக்கும் காலம்!

காலம்

காலண்டரில்
சிதறிய மழைத்துளி
துளியிலிருந்து
பெய்கிறது காலம்

உயிரே

ஏன் என் காதலியின் உயிரை பிரித்தாய்
என எமனிடம் வாதிட்டேன் !
அதற்கு அவனோ
"உன் ஆயுள் முடிந்தது என்றான்"!
ஆம்
என் உயிரே அவள்தானே !

மழை

மழையே நீ என்ன
பூமியின் காதலியோ!
அதனால்தான்
மேகத்தை விட்டு
பூமியை தேடி வருகின்றாயோ !

உருவாதல்

கவிதையில் உருவான
பட்டாம் பூச்சி
பூக்களுக்குப் போகாமல்
வார்த்தைகளையே
மொய்க்கிறது

பெயர் தேவையில்லை

அந்தக் குழந்தையிடம்
பெயர் கேட்கத்
தோன்றவில்லை
தேவதைக்குப் பெயர்
தேவையில்லை

கடவுள் சொன்ன கவிதை

கடவுள் சொன்ன கவிதையை
நினைத்துப் பார்த்தபோது
இருந்தது
எழுதிப் பார்த்தபோது
மறைந்தது

தேடிய மழை

வானத்தை வெட்டி
தொலைந்த
மழையைத் தேடினேன்

சிரித்தபடியே
மேகம் சொன்னது
அது பூமிக்கு போய்
நீண்ட நாளாகிறது
போய்ப் பார்

விடுமுறை

இன்று விடுமுறை
எடுத்துக் கொண்டேன்
தூக்கத்தை
ரசிக்க வேண்டும்
தூங்கியபடி

கடிகாரம்

யாருமற்ற வெளியில்
ஓடிக்கொண்டிருக்கும்
கடிகாரம்
தனக்கு நேரத்தைச்
சொல்லியபடி

உன் முன்னால்

உன் முன்னால்
மட்டும் தான்
சிரிப்பை மனசுக்கும்
வார்த்தைகளை
விழிகளுக்கும்
இடம் மாற்றி
விடுகிறேன்...
இதழிலிருந்து!

மனசே என்னை மறவாதே!!!

சிலர் இறந்து போனால்
மனசு மறந்து போகும்
அனால் சிலர் மறந்து போனாலே
மனசு இறந்து போகும்...

அதோ அந்த பறவைபோல வாழ வேண்டும்

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

காற்று நம்மை அடிமையென்று விலகவில்லையே
கடல் நீரும் அடிமையென்று சுடுவதில்லையே

காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே

தோன்றும் போது தாயில்லாமல் தோன்றவில்லையே
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே

வாழும்போது பசியில்லாமல் வாழவில்லையே
போகும்போது வேறுபாதை போகவில்லையே

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை

ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன?

ஆடிய ஆட்டமென்ன?
பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வமென்ன?
திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன...?

வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?

ஆடும் வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம்
கொள்ளிவரை வருமா? (வீடு)

தொட்டிலுக்கு அன்னை
கட்டிலுக்குக் கன்னி
பட்டினிக்குத் தீனி
கெட்ட பின்பு ஞானி! (வீடு)

சென்றவனைக் கேட்டால்
வந்துவிடு என்பான்
வந்தவனைக் கேட்டால்
சென்று விடு என்பான்! (வீடு)

விட்டுவிடும் ஆவி
பட்டுவிடும் மேனி
சுட்டுவிடும் நெருப்பு
சூனியத்தில் நிலைப்பு! (வீடு)

ஆசையே அலைபோலே நாமெலாம் அதன்மேலே கண்ணதாசன்

ஆசையே அலைபோலே நாமெலாம் அதன்மேலே
ஓடம்போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே! (ஆசை)

பருவம் என்னும் காற்றிலே
பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வார்
சுகம் பெறுவார் அதிசயம் காண்பார்!
நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவார்? (ஆசை)

வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே
வடிவம் மட்டும் வாழ்வதேன்
இளமை மீண்டும் வருமா
மணம் பெறுமா முதுமையே சுகமா!
காலம் போகும் பாதையை இங்கே யார் காணுவார்? (ஆசை)

சூறைக்காற்று மோதினால்
தோணி ஓட்டம் மேவுமோ
வாழ்வில் துன்பம் வரவு
சுகம் செலவு இருப்பது கனவு!
காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்? (ஆசை)

நினைக்கத் தெரிந்த மனமே மறக்கத் தெரியாதா.. கண்ணதாசன்

நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா
உயிரே விலகத் தெரியாதா

(நினைக்கத்)

மயங்கத் தெரிந்த கண்ணே உனக்கு உறங்கத் தெரியாதா
மலரத் தெரிந்த அன்பே உனக்கு மறையத் தெரியாதா
அன்பே மறையத் தெரியாதா

(நினைக்கத்)

எடுக்கத் தெரிந்த கரமே உனக்கு கொடுக்கத் தெரியாதா
இனிக்கத் தெரிந்த கனியே உனக்கு கசக்கத் தெரியாதா
படிக்க தெரிந்த இதழே உனக்கு முடிக்கத் தெரியாதா
படரத் தெரிந்த பனியே உனக்கு மறையத் தெரியாதா
பனியே மறையத் தெரியாதா

(நினைக்கத்)

கொதிக்கத் தெரிந்த நிலவே உனக்கு குளிரத் தெரியாதா
குளிரும் தென்றல் காற்றே உனக்கு பிரிக்கத் தெரியாதா
பிரிக்கத் தெரிந்த இறைவா உனக்கு இணைக்கத் தெரியாதா
இணையத் தெரிந்த தலைவா உனக்கு என்னைப் புரியாதா
தலைவா என்னைப் புரியாதா

(நினைக்கத்)

சுட்டும் விழிச்சுடர் தான் - கண்ணம்மா - என் காதலி- பாரதியின் கவிதை

சுட்டும் விழிச்சுடர் தான் - கண்ணம்மா !
சூரிய சந்திர ரோ ?
வட்டக் கரிய விழி, கண்ணம்மா !
வானக் கருமை கொல்லோ ?
பட்டுக் கருநீலப் - புடவை
பதித்த நல் வயிரம்
நட்ட நடு நிசியில் - தெரியும்
நக்சத் திரங்க ளடீ !
சோலை மல ரொளியோ - உனது
சுந்தரப் புன்னகை தான் ?
நீலக் கடலலையே - உனது
நெஞ்சி லலைக ளடி !
கோலக் குயி லோசை - உனது
குரலி னிமை யடீ !
வாலைக் குமரி யடீ ! - கண்ணம்மா !
மருவக் காதல் கொண்டேன்.
சாத்திரம் பேசு கிறாய், - கண்ணம்மா !
சாத்திர மேதுக் கடீ !
ஆத்திரங் கொண்டவர்க்கே, - கண்ணம்மா !
சாத்திர முண்டோ டீ !
மூத்தவர் சம்மதியில் - வதுவை
முறைகள் பின்பு செய்வோம் ;
காதிருப் பேனோ டீ - இது பார் ,
கன்னத்து முத்த மொன்று !

Post a Comment (0)
Previous Post Next Post