காதலித்துப் பார்! - தமிழ்..! - திருத்தம்..!

காதலித்துப் பார்!

காதலித்துப் பார்!
-------------------------------------

உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்...
உலகம் அர்த்தப்படும்...
ராத்திரியின் நீளம்
விளங்கும்....

உனக்கும்
கவிதை வரும்...
கையெழுத்து
அழகாகும்.....
தபால்காரன்
தெய்வமாவான்...

உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்...
கண்ணிரண்டும்
ஒளிகொள்ளும்...

காதலித்துப்பார் !

***

தலையணை நனைப்பாய்
மூன்று முறை
பல்துலக்குவாய்...
காத்திருந்தால்
நிமிஷங்கள் வருஷமென்பாய்...
வந்துவிட்டால்
வருஷங்கள் நிமிஷமென்பாய்...
காக்கைகூட உன்னை
கவனிக்காது
ஆனால்...
இந்த உலகமே
உன்னை கவனிப்பதாய்
உணர்வாய்...
வயிற்றுக்கும் தொண்டைக்கமாய்
உருவமில்லா உருண்டையொன்று
உருளக் காண்பாய்...
இந்த வானம் இந்த அந்தி
இந்த பூமி இந்த பூக்கள்
எல்லாம்
காதலை கவுரவிக்கும்
ஏற்பாடுகள்
என்பாய்
காதலித்துப் பார்!

***

இருதயம் அடிக்கடி
இடம் மாறித் துடிக்கும்...
நிசப்த அலைவரிசைகளில்
உனது குரல் மட்டும்
ஒலிபரப்பாகும்...
உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே
அம்புவிடும்...
காதலின்
திரைச்சீலையைக்
காமம் கிழிக்கும்...
ஹார்மோன்கள்
நைல் நதியாய்ப்
பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும்
சகாராவாகும்...
தாகங்கள் சமுத்திரமாகும்...
பிறகு
கண்ணீர்த் துளிக்குள்
சமுத்திரம் அடங்கும்...
காதலித்துப் பார்!

***

சின்ன சின்ன பரிசுகளில்
சிலிர்க்க முடியுமே...
அதற்காகவேனும்
புலன்களை வருத்திப்
புதுப்பிக்க முடியுமே...
அதற்காகவேனும்...
ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தம் விளங்குமே..
அதற்காகவேனும்...
வாழ்ந்துகொண்டே
சாகவும் முடியுமே
செத்துக் கொண்டே
வாழவும் முடியுமே...
அதற்காக வேணும்...
காதலித்துப் பார்!

தமிழ்..!

தமிழ் அமுதம் பருகவில்லை - நீ
அதன் செம்மை உணரவில்லை

அவனவன் அவன் மொழியிலே
கண்டு பிடிப்புகளை எழுதயிலே - நீ
தமிழிலே அதையும் எழுதவில்லை

நம்சித்தர்கள் எழுதிய பாட்டினிலே
இல்லாததேது ஆங்கில நூல்களிலே - நீ
அதை உணரனும் உண்மைலே

விஞ்ஞானமும் அதில் இருக்கு
மெஞ்ஞானமும் கலந்து இருக்கு - நீ
எந்நாளும் ஏத்துக்கணும் உன்ஞானத்திலே

திருத்தம்..!

வாழ்ற வாழ்கை
கொஞ்ச காலம்தான்,
அதில் வருத்தம் இல்லாம
வாழ்ந்து போகத்தான்
அவனவன் அடுத்தடுத்து
தப்பு செய்யுறன் - நல்லது
செய்ய விருப்பமில்லாம
பழகி போய்டான்..

வாழ்கைல அங்கங்க
வருந்தியாகணும்
அப்பப்ப திருந்தியாகணும்
வருத்தம் வந்தா கொஞ்சநேரம்தான்
அதுவே வடுவா மாறிட்டா
நீ கொஞ்ச காலம்தான்..

படிச்சு முடிச்ச உடனே
வேல பாத்து வெச்ச
பணத்த சம்பாதிச்சு சேத்துவெச்ச
உயிர் குடுதவளுக்கு செஞ்சுபுட்ட
உன் நாட்டுக்கு நீ என்ன செஞ்ச

நாட்டு மேல குத்தம் சொல்லாதே - அதில்
நீயும் ஒருத்தன் மறந்துவிடாதே
தப்பு செஞ்சா திருந்தி விடு - இங்கே
தப்பு நடந்தா திருத்தி விடு..!

வைரமுத்துவின் கவிதைகள்

இறக்கமுடியாத சிலுவைகள்

சொன்னவள் நான் தான்!
உங்களுக்கும் சேர்த்து
நான் தான் சுவாசிக்கிறேன்
என்று சொன்னவள் நான் தான்!

உங்களைத் தவிர
என் கண்களுக்கு
எதையும் பார்க்கத் தெரியவில்லை
என்று சொன்னவள் நான் தான்!

உங்கள் வாழ்க்கை என்னும் கோப்பையை
என் உயிர் பிழிந்து ஊற்றி நிரப்புவேன்
என்று சொன்னவள் நான் தான்!

நம் கல்யாணத்தில்
கடல் முத்துக்களையும்!...
வானம் நட்ஷத்திரங்களையும்!...
அட்ஷதை போடும்
என்று சொன்னவள் நான் தான்!

நாம் பிரிந்தால்
மழை மேல் நோக்கிப் பெய்யும்!
கடல் மேல் ஒட்டகம் போகும்!
காற்று மரிக்கும்!
என்று சொன்னவள் நான் தான்!

இதோ அடிக்கோடிட்ட வார்த்தைகளால்
இதைச் சொல்வதும் நான் தான்!

என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

நான் காதல் கொண்டது நிஜம்!
கனவு வளர்த்தது நிஜம்!
என் ரத்தத்தில்
இரண்டு அனுக்கள் சந்தித்துக் கொண்டால்
உங்கள் பெயரை மட்டுமே உச்சரித்தது நிஜம்!

என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

காதலரைத் தெரிந்த எனக்கு
காதலைத் தெரியவில்லை!
இந்தியக் காதல் என்பது
காதலர்களோடு மட்டும் சம்மந்தப் பட்டதில்லை!

இந்தியா காதலின் பூமி தான்
காதலர் பூமியல்ல!

காதலுக்கு சிறகு மட்டுமே தெரியும்!
கால்யாணத்திற்குத் தான்
கால்களும் தெரியும்!

எனக்குச் சிறகு தந்த காதலா
என் கால்களின் லாடத்தை யாரறிவார்?...

என் தாயை விட
சாய்வு நாற்காலியை
அதிகம் நேசிக்கும் தந்தை!

சீதனம் கொணர்ந்த
பழைய பாய் போல்
கிழிந்து போன என் தாய்!

தான் பூப்பெய்திய செய்தி கூட
புரியாத என் தங்கை!

கிழிந்த பாயில் படுத்தபடி
கிளியோபாற்ராவை நினைத்து
ஏங்கும் என் அண்ணன்!

கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சியில்
கலர்க் கனவு காணும் என் தம்பி!

அத்தனை பேருக்கும்
மாதா மாதம் பிராணவாயு வழங்கும்
ஒரே ஒரு நான்!

கால்களில் லாடங்களோடு
எப்படி உங்களோடு ஓடி வருவேன்?...
என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

ஐரோப்பாவில்
கல்யாணத் தோல்விகள் அதிகம்!
இந்தியவில்
காதல் தோல்விகள் அதிகம்!

இந்தியா காதலின் பூமி தான்!
காதலர் பூமியல்ல!

போகிறேன்!
உங்களை மறக்க முடியாதவளை
நீங்கள் மறப்பீர்கள்
என்ற நம்பிக்கையோடு போகிறேன்!

என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

அழகு

பார் அழகு
பார்க்கும் விழி அழகு
பார்ப்பதெல்லாம் அழகு

இருள் அழகு - அதிலே
ஒரு துளி ஒளியழகு

மலை அழகு - ஆங்கே
பொழியும் மழையழகு

சிலை அழகு - சிற்பியின்
கலை அழகு

ஆண் அழகு - அவன்கொண்ட
ஆண்மை அழகு

பெண்மை அழகு - அவள்ஈனும்
தாய்மை அழகு

மொழி அழகு - செந்தமிழாயின்
அதுவன்றோ அழகு

உண்மை அழகு - பொதுநல
பொய்யும் அழகு

பிறப்பு அழகு - பிறர்கெனின்
இறப்பும் அழகு

திருமணம் அழகு - மனமிரண்டும்
ஒன்றாயின் இல்லறம் அழகு

துன்பம்நீக்கும் துறவறம் அழகு
மானம்காக்கும் மறம் அழகு
மகுடம்கொண்ட சிரம் அழகு
வாரிவழங்கும் கரம் அழகு

மனம் அழகு - எனின்,
யாவும் பேரழகு..!

இவன் மானிடன்..!

மானிடனாய்ப் பிறந்துவிட்டோம் - நாம்
மதிகெட்டு இருந்துவிட்டோம்


ஏட்டிலுள்ளதை படித்துவிட்டோம் - அதையேன்
படித்தோம் மறந்துவிட்டோம்


மதசாதியால் பிரிந்துவிட்டோம் - மனம்,
அதை சகதியால் நிரப்பிவிட்டோம்


பனத்தை மனதிலே எத்திவிட்டோம் - குணம்,
அதை குப்பையிலே கொட்டிவிட்டோம்


கொள்ளாத குற்றங்களை செய்திடுவோம் - பலம்
இல்லாத எளியவன்மேல் பழிசொல்லிடுவோம்


தள்ளாத வயது சென்றிடுவோம் - அன்றும்
இல்லாத பெருமை பேசிடுவோம்


மானம்கெட்ட ஈனப்பிறவியடா மானுடன் - இவன்
மாண்டு அழிந்தாலும் மனம் குணம் மாறிடன்

கேளிக்கை..!

இருக்கின்ற நாழியெல்லாம் இன்பமாய் களிப்பதும்
இரவுடன் பகலும் சுகமாய் துயில்வதும்

கணமெல்லாம் கேளிக்கையில் திளைப்பதும்
திரைகூத்தாடியை சிரஸ்தார் என்பதும்

மதி மயக்கும் மது அருந்துவதும்
மனம் பசப்பும் மாது பின்செல்வதும்

உரிமைகளையும் உடைமைகளையும் இழக்குந்தருணம்- நம்
உறவுகளையும் கடமைகளையும் மறக்குந்தருணம்

மதிகெட்டு மனிதன் செய்யும் தருணம் - ஆங்குநல்
மதியுள்ளோர் அதை மாற்றிட வரணும்..!

காதல் கவிதை

நீ சொற்கள் நிறுத்தி
பார்வை தொடங்கியதும்
கவிதை களைந்து
நிர்வாணமாகிறது காதல்!

இரண்டு முத்தங்கள் கொடுத்து
இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்
இயலாத செயலென
இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்

யாவரிடமும் இயல்பாய்ப் பழகும் உனது சொற்கள்
எனது நுண்விருப்பங்களை அறிந்து கொள்ள
என்னிடம் மட்டும் வேவு பார்க்கின்றன
எப்பொழுதும் அளந்தே பேசுபவன்
உனது சாமர்த்தியங்களை சாத்தியப்படுத்துவதற்காகவே
அளவின்றி பேசுகிறேன்

உனது பார்வை மலரும்பொழுதெல்லாம்
எனது விழிகளை வண்ணத்துப்பூச்சிகளாய் மாற்றிட
சிறகடித்து தவிக்கும் இமைகள்!

தனியே நீ முணுமுணுக்கும்
இனிய பாடல்கள்
இசைத்தட்டில் ஒலிக்கையில்
இனிமை இழப்பதேன்?

விலைவாசி

ஏறும் இறங்காது
ஒருவழிப் பாதை
விலைவாசி





நீ இருக்கிறாய்

காதலிப்பதற்கு
நீ இருக்கிறாய்
என்ற காரணமே
போதுமாயிருக்கிறது
நான் தொடர்ந்து சுவாசிப்பதற்கு!

மழை

ஓடிவந்து என்
கழுத்தைக் கட்டிக்கொண்டு
உன் கன்னம் உரச
நீ பேசும்பொழுதெல்லாம்
விதவித வண்ணங்களாய்
என்னுள் பெய்கிறது மழை

ஒற்றை குடை

உனக்கு பிடித்த மண்வாசத்தில்
நீயும்
எனக்கு பிடித்த உன்வாசத்தில்
நானும்
ஒற்றை குடைக்குள்

நெஞ்சு பொறுக்குதில்லையே

நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
கொஞ்சமோ பிரிவினைகள் - ஒரு
கோடியென் றாலது பெரிதாமோ ?

அஞ்சுதலைப் பாம்பென்பான் - அப்பன்
ஆறுதலை யென்றுமகன் சொல்லிவிட்டால்
நெஞ்சு பிரிந்து விடுவார் - பின்பு
நெடுநா ளிருவரும் பகைத்திருப்பார் (நெஞ்சு)சாத்திரங்க ளொன்றும் காணார் - பொய்ச்

சாத்திரப் பேய்கள்சொலும் வார்த்தைநம்பியே
கோத்திரமொன் யிருந்தாலும் - ஒரு
கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ்வார்
தோத்திரங்கள் சொல்லியவர்தாம் - தமைச்
சூதுசெயு நீசர்களைப் பணிந்திடுவார் - ஆனால்
ஆத்திரங் கொண்டே யிவன் சைவன் - இவன்
அரிபக்த னென்றுபெருஞ் சண்டையிடுவார் (நெஞ்சு) எண்ணிலா நோயுடையார் - இவர்

எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்
கண்ணிலாக் குழந்தைகள்போல் - பிறர்
காட்டிய வழியிற் சென்று மாட்டிக் கொள்வார்
நண்ணிய பெருங்கலைகள் - பத்து
நாலாயிரங் கோடி நயந்து நின்ற
புண்ணிய நாட்டினிலே - இவர்
பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார்

கவிதை

கவிதை வேண்டுமென
பேனா தூக்கினேன் ...!!
கைகள் தானாய் - கிருக்குதடா
உன் பெயரை ...!!

கொலுசு

உன்னோடு கூடவர ஆசையின்றி
விழுந்த உன் கொலுசுதான் உன்னோடு
கூடவர என் ஆசையை வளர்த்தது

முதன்முதல்

நான் முதல்த் தடவை பயணித்த
விமானத்தில்த்தான் உன் நினைவுகளை
தரையிறக்கிவிட்டு முதன்முதல்
உன்னை கனவு காண ஆரம்பித்தேன்

உன் மெளனங்கள்

காயப்படுத்துவதற்கென்றே
மெளனங்கள் சிலவற்றை
உருவாக்குகிறாய்.
பூப்பறித்தலின் ஆனந்தத்தை
அவை உனக்களிக்கலாம்.
அல்லது
அப்பழுக்கற்ற குழந்தைமையின்
குதூகலத்தை உணர்வுகளில்
தெளிக்கலாம்.
இடுகாட்டில் எரிகின்ற உன்
சுயத்தின் கருகியவாடையை
என்னை நோக்கி சுமந்து
வருகின்றன
அந்த மெளனங்கள்.
வலி நிறைந்த
புன்னகையுடன்
இருகரம் விரித்து வரவேற்கிறேன்.
எங்கோ
உருப்பெற்றுக்கொண்டிருக்கின்றன
என் கல்லறைக்கான
செங்கல்கள்.

எழுத கற்றுக் கொடுத்தேன்

தன் பெயரை பிழையாக எழுதிக் கொண்டிருந்த
சிறுமியிடம் அழகாய் எழுத கற்றுக் கொடுத்தேன்
என் காதலியின் பெயரும் அது என்பதால்

திருமணங்கள்

பல திருமணங்களும் முறிந்து போவது கருத்து
வேறுபாடுகளால் அல்ல... அந்த
வேறுபாடுகளை எதிர்கொள்ளத்
தெரியாததால்தான்!

கவிதை

என்னை எழுத
வைப்பதற்காகவே
கவிதையாய் படுத்துக்
கிடப்பாய் எனக்கு முன் நீ

Post a Comment (0)
Previous Post Next Post