கடைசியாக... - மழை - நினைவுக்கு வருகிறாய்

கடைசியாக...

நீ+நான் = முடிவில்லா மனயுத்தம்

நான்+நான் = சுயமழித்து திரிதல்.

கர்த்தன்+புத்தன் = போதிமர சிலுவைகள்

கோபம்+பிடிவாதம் = உடைந்த கண்ணாடிக்காதல்

நேசம்+பாசம் = வறண்ட ஏரியில் துடிக்கும் நினைவுமீன்கள்

ஆத்மா+நாம் = உயிர் துறந்த உடல்கூடு

கடைசியாக,

தனிமை+தனிமை = ஈரம் கசியும் என் கவிதைகள்

மழை

மழை வந்தது
மதம் மாறினார்கள்
முக்காடு போட்டார்கள்


நினைவுக்கு வருகிறாய்

அவசரமாய் நான் வீதி
கடக்கையிலும் நீயே
நினைவுக்கு வருகிறாய்

எப்போதோ உன்னோடு
வீதி கடக்கையில் நீ
குட்டுவைத்து குழந்தைபோல்
எனை கூட்டிச் சென்றாயே

பட்டுப்பூச்சி

சத்தமே எழுப்பாமல்
நீ அருகில் செல்லும்போதெல்லாம்
பட்டுப்பூச்சி பறந்து விடுகிறது

மறுபடியும் தவற விட்டதை
நினைத்து நீ முகம் சுளிக்கிறாய்
தோல்வியிலும் நீ எத்தனை அழகு

தொடர்ந்து முயற்சி செய் என்கிறேன்!
பட்டாம்பூச்சிகள் பறந்து விடும்
என்ற நம்பிக்கையில்!

இழப்பு!

உனக்காகவே
எல்லாரையும்
இழந்தேன்

நீ என்னை இழ‌ப்பாய்
என்று தெரியாம‌ல்!.

தொலைகடல்

விரல் பற்றும் தொலைவில்
எப்போதும் இருப்பதில்லை
உன் இருத்தல்.
கடிகார முள்ளில்
சிக்கித் துடிக்கும்
மீனாக
நம் ப்ரியங்கள்.
கனவுகளின் கறுப்புவெள்ளை
பிரதேசங்களெங்கும் பொழிகிறது
உன் குரல்மழை.
தூரத்திலிருந்தும்
அதே குறுநகையுடன்
எப்போதும் எனக்குள்
வசிக்கிறாய்
நீ.

உன்னைத்தவிர என்று

நமக்கான இடைவெளியில்
காற்றோடு அன்பையும் விதைத்த உனக்கு
என்னிடமிருந்து
என்ன வேண்டும் என்றேன்...
எதுவுமே வேண்டாம் என்றாய்
என் அழகான திடுக்கிடலை
அன்பாக ரசித்தபடி...
பிறகுதான் சொன்னாய்.
உன்னைத்தவிர என்று!

கைதியாய் நான்

என்னை அழகாய் ஏற்றிவிட்டாள்
குற்றவாளிக் கூண்டில் _ அனுபவிக்கிறேன்
அவள் எனக்கு செய்த குற்றங்களுக்கும்
சேர்த்து தண்டனையை

காந்தி நோட்டு

காந்தி
நாட்டுக்காக
உழைத்தார்

நாம்
காந்தி
நோட்டுக்காக
உழைகின்றோம்

அடிக்கடி!

உன்
சைக்கிள்
நட்டுப்போல்

அடிக்கடி
கழறுகிறேன்

நீ
ஓடுவதால்.

இவை போலவே

போதிமரத்தடியில்
நாய்கள் கூடலாம்.
மகாத்மாவின் கல்லறைமேல்
பறவைகள் எச்சமிடலாம்.
மயிலிறகு விற்பவனிடம்
மாடுகள்பற்றி விசாரிக்கப்படலாம்.
..................
..................
..................

இவை போலவே,

புனித மலர்கள் நிறைந்த
நமது நேசத்தை
வெறும் காகிதப்பூக்கள் எனலாம்
நீ.

காதல் இல்லை போலிருக்கிறது

என் வீட்டு நாய்
நன்றாக தூங்குகிறது...
அதற்கு
காதல் இல்லை போலிருக்கிறது

காத்திருப்பு

உனக்காக காத்திருக்கும் பொழுது
வாலறுந்த பட்டமென
தத்தளிக்கும் மனது
நீ
அருகில் வந்த உடன்
நூலறுந்த பட்டமாய்
உன் மனதில்
சிக்கிக் கொள்கிறது

நீ நான்...

தெளிவாகப் பேசி விடுகிறாய் நீ
தடுமாறி விடுகிறேன் நான்...

நம் காதல்

நிழல் தேடி
நாம் மரம்
ஒதுங்குவது போல்
உன் மனம் தேடி
என் உயிர் ஒதுங்குமிடம்
நம் காதல்

உலகம் பைத்தியம் ஆனது

நின்
அருகாமையில் வேகமாகவும்
தூரத்தில் மெதுவாகவும்
சுழல்வதுமாய் உலகம்;
உன்னால்
பைத்தியமாகிவிட்டது அதுவும்!

வாழ்க்கை!

கருப்பு
வெள்ளை
பச்சை
காவி
சாம்பல்.

நீ இருக்கிறாய்

காதலிப்பதற்கு
நீ இருக்கிறாய்
என்ற காரணமே
போதுமாயிருக்கிறது
நான் தொடர்ந்து சுவாசிப்பதற்கு!

காதல் கப்பல்

வெகுநாட்கள் கழித்து
சந்திக்கும் கணத்தில்
நம் விழி பொங்கும் கண்ணீரில்
கப்பல்விடக் காத்திருக்கிறது
காதல்!

ஆகாயம்!

மழை நின்ற
இரவில்
முறுக்கிய வேலி
கம்பிகளின் முடிச்சுகளில்
துளித்துளியாய் தொங்கியபடி
இன்னும் (மண்ணில்) கரையாமல்
இருக்கிறது ஆகாயம்!

Post a Comment (0)
Previous Post Next Post