இதயத்தின் வாசனையில் நட்பு
பால் வாசனையில்
அம்மா
அக்குள்
வாசனையில்
துணைவி
இதயத்தின்
வாசனையில்
நட்பு
வாழ்க்கை அநாகரிகமானதுதான்
நேரமாகிவிட்டது
எழுந்து போங்கள்
என்று சொல்கிற
பூங்காக்கள் உள்ளவரை
வாழ்க்கை
அநாகரிகமானதுதான்
எத்தனைக் கண்களுக்கு வாய்த்திருக்கும்
கடற்கரையின்
முகம் தெரியாத இரவில்
பேசிக் கொண்டிருந்த நம்மை
நண்பர்களாகவே
உணரும்
பாக்கியம்
எத்தனைக் கண்களுக்கு
வாய்த்திருக்கும்
உனக்கு மடல் எழுத
உனக்கு மடல் எழுத
உட்காருகிற போது
மட்டும்தான்
அப்புறம்
எழுதிக் கொள்ளலாம்
என்பதற்கான
அர்த்தமற்ற காரணங்கள்
மிக எளிதாய்
எனக்குக் கிடைத்து
விடுகின்றன
சொல்லிவிட முடியுமா உன்னால்
போக்குவரத்து அதிகமுள்ள
அந்தச் சாலையோரத்தில்
நாம் பேசிக்கொண்டிருந்த பொழுது
எத்தனை முறை
காதுகளுக்குத்
திரும்பினோம் என்று
சொல்லிவிட முடியுமா
உன்னால்
பூக்கிறது நட்பு
'எனக்கு மட்டும்' என்று
குவிகிற
மையத்தையே
காம்பாக்கிக் கொண்டு
'வெளி'வாங்கிப்
பூக்கிறது
நட்பு
சம்மத உடன்படிக்கை
தேர்வு முடிந்த
கடைசி நாளில் நினைவேட்டில்
கையொப்பம் வாங்குகிற
எவருக்கும் தெரிவதில்லை
அது ஒரு நட்பு முறிவிற்கான
சம்மத உடன்படிக்கைஎன்று
கனவில் கூட
கனவில் கூட
என்னைக்
கிள்ளிப் பார்க்கும்
இந்தச் சுரப்பிகள்
உன்னைக்
கண்டதும் எப்படி
இவ்வளவு
இயல்பாய்
தூங்கிவிடுகின்றன
விதை நட்பில் இருக்கிறது
தாய்ப்பாலுக்கான
விதை
காதலில் இருக்கிறது
தாய்மைக்கான
விதை
நட்பில் இருக்கிறது
எளிதன்று
காமத்தாலான
பிரபஞ்சத்தில்
நட்பைச்
சுவாசித்தல்
அவ்வளவு
எளிதன்று
நண்பர்கள்
பேருந்து நிறுத்தத்திற்குச்
சற்றுத் தள்ளிநின்று
பேசுகிறவர்கள்
காதலர்கள்
நிறுத்தத்திலேயே
நின்று
பேசுகிறவர்கள்
நண்பர்கள்
நட்புக்குத்தானே வாய்த்திருக்கிறது
தூங்கு என்று
மனசு
சொன்னதும்
உடம்பும்
தூங்கிவிடுகிற
சுகம்
நட்புக்குத்தானே
வாய்த்திருக்கிறது
நட்பின் வலி
சேர்ந்து
நிழற்படம்
எடுத்துக் கொண்டு
அடிக்கடி
மடல் எழுதுவதாகச்
சொல்லிக் கொண்டு
பிரிகிற நட்பின் வலியை
மறைத்துக்
கொள்வதற்காகத்தான்
மனைவியிடமும்
பிள்ளைகளிடமும்
பேத்திகளிடமும் கூட
சிரிக்கச்
சிரிக்கப்
பேசுகிறார்கள்
இவர்கள்
கண்கள் தருகிறவள்
கண்களை வாங்கிக் கொள்ள
மறுக்கிறவள்
காதலியாகிறாள்
கண்களை
வாங்கிக் கொண்டு
உன்னைப்போல்
கண்கள் தருகிறவள்தான்
தோழியாகிறாள்
என் தலையணையில் சில மல்லிகைகள்
ஒரு ஞாயிற்றுக்கிழமை
மதியத்தில்
தாமதமாய் வந்து
என்னை எழுப்பாமலேயே
நீ சொல்லியபடி
நான் சமைத்து வைத்திருந்த உணவை
நிதானமாகச்
சாப்பிட்டுவிட்டு
என் பக்கத்திலேயே வந்து
படுத்துத்
தூங்கிவிட்டும் போயிருக்கிறாய்
என்பதைச் சொல்லிப்
பரிகசித்தன
என் தலையணையில் சில
மல்லிகைகள்
ஒரு நாள் வேண்டும்
என் துணைவியும்
உன் கணவரும்
கேட்கும்படி
நம்
பழைய மடல்களையெல்லாம்
படித்துப் பார்க்க
ஒரு
மழை தொடங்கும்
நாள் வேண்டும்
உனக்குக் கற்றுக் கொடுத்தது யார்
இரண்டு இரவுகள் ஒரு பகல்
ஈரக் காற்றுகளால் நெய்த அந்த
அந்திப் பொழுது
யாவும் பாழாக
அந்தத்
தொடர் வண்டிப் பயணத்தில்
எனக்கு எதிரிலேயே
அமர்ந்து, தூங்கி,
சாப்பிட்டு, படித்துப்
பேசாமலேயே
இறங்கிப் போக பெண்ணே
உனக்குக் கற்றுக்
கொடுத்தது
யார்
வண்ணத்துப் பூச்சிகள்
அந்த
மொட்டை மாடியின்
வெளிச்சம்
குறைந்த இரவின்
தனிமையில்
நம்மை
அருகருகே
படுக்க வைத்துவிட்டு
நாம்
பேசிக்கொண்டே
போய்வந்த
பாதைகளைத் தாம்
பகலில்
வண்ணத்துப் பூச்சிகள்
வரைந்து
பார்க்கின்றன
நட்பாகவே இருப்பதுதான்
நண்பர்கள் என்றவர்கள்
காதலர்களாகியிருக்கிறார்கள்
எனக்குத் தெரிய அண்ணன் தங்கை என்று ஆரம்பித்தவர்களே
கணவன் மனைவியாகவும் ஆகியிருக்கிறார்கள்
ஆனாலும் சொல்கிறேன்
நட்பு என்பது நம்மைப்போல் என்றும்
நட்பாகவே இருப்பதுதான்
கடலும் துளி
துளியே கடல்
என்கிறது
காமம்
கடலும்
துளி
என்கிறது
நட்பு