அரசியல்
ஆயில் கிணற்று மேலே
அயராத இடி மழை
வளைகுடாபோர்
வாழ்க்கை
மர வியாபாரி பார்க்கிறான்
வேர் முதல் கிளை வரை
குருவிக்கூடு நீங்கலாக!
பயம்
ஆறுபடை முருகன் கோயிலுக்கு
ஏழு பூட்டு......
"யாமிருக்க பயமேன்
கோபம்
தாமதமாக வருவது கூட சுகம்தான்
காத்திருந்த கோபத்தில்
காதை திருகுவாள்......!
வறுமை
கூலியற்ற நாட்கள்
விழித்திருக்கிறது
"பசி"....
நிலா
மார்கழிப் பனியில்
நனையும் மஞ்சள் நிலா
கோலமிடும் அவள்!
இதயம்
விற்பனையில் வண்ணத்துப் பூச்சி
துடிக்கிறது
பூச்செடி.
நன்றி
வாழ்த்து அட்டை
முகவரியில் வருடினேன்
எழுதிய கையை.
நட்பு
தங்கிப் படித்த விடுதி
எல்லாரும் அந்நியமாய்
ஓடிவரும் நாய்
மனசு
கண்ணாடியைத் துடைக்கத் துடைக்க
என் முகத்தின் அழுக்கு
மேலும் தெளிவாகிறது
செயற்கை
காங்ரீட்
காடுகள்
நகரம்!
தோல்வி
போர்க் களத்தின் கருவறை
சுமக்கப் பழகினால்
சுகப் பிரசவம் நிச்சயம்...
காதல்
உன்விழிகள் பேசியதால்
என் மொழிகள்
மவுனமானது.....
முதிர்கன்னி!
கூந்தலில் வெளிச்சம்
வாழ்க்கையில்
இருட்டு...
ஏமாற்றம்
காய்ந்த ஏரி
நம்பிக்கையின் மிச்சம்
கொக்குகள்
சுனாமி
கடற்கரை மணல்
திரும்பிப்பார்த்தேன் காணவில்லை
சுவடுகள்
பெண்
கைதியின் பெயர்
இல்லத்தரசி
தாய்மொழி
ஆங்கிலப் பள்ளியில்
அடிவாங்கும் குழந்தை
அழுகிறது..."அம்மா"
கடிதம்
கடல் கரைக்கு
அனுப்பும் காதல் கடிதம்
அலைகள்...
மரணம்
தொழிற்சாலையில் சங்கொலி
எச்சரிச்கை செய்தது
அருகில் ஓடும் ஆற்று மீனுக்கு