உலகம் - உள்வெளி - விஞ்ஞானம்

உலகம்

இளைஞனே - நீ
நினைக்கின்ற படி
இந்த உலகம்
ரோஜாப்பூக்களால்
ஆனதல்ல
கள்ளிப்பூக்களும்
நிறைந்தது!

குயில்களின்
குரல் மட்டுமல்ல
கோட்டான்களின்
குரலும் ஒலிக்கும்

சிங்கத்தின்
கர்ஜனை மட்டுமல்ல
ஓநாய்களின்
ஊளையும் கேட்கும்!

வாழ்க்கையில்
வெற்றிகள் மட்டுமல்ல
தோல்விகளும்
நிறைந்தது.

உள்வெளி

சோப்பு நுரையின்
மெலிதான திரை
மூச்சுக் காற்றிலேயே
உடைந்துவிடும்.

நானும் என் மனதும்
அப்படித்தான் !
என் காதலைச் சொல்லும்
கணத்தில்.....!

விஞ்ஞானம்

நீயோ எட்டுதிசைகளிலும்
நடந்து செல்கிறாய்!
என்ன விஞ்ஞானமிது!
காந்தம் வடக்கு தெற்காய்
மட்டுமே நிற்குமாம்!

கரு

விழிகளின் தீண்டலில்
புதிதாய் உருவான
கரு!

தயை செய்து
கலைத்து விடாதே!
பாவம் சிசுக்கொலை!

ஒற்றை ரோஜா

தரை தொடாத
விழுதுகளில் ஊஞ்சலாடுகிறது...
அவள் கூந்தலில்
ஒற்றைரோஜா

கடிகாரம்

கண்ணாடி கூட்டிற்குள்
ஒரு காதல்
ஜோடி!
"கடிகாரம்"

பணம்

பெட்டியில்
பூட்டி பூட்டி வைத்ததில்
காகிதமும் பணமும்
ஒரே ஜாதியெனப் புரிந்தது!

காதல்

வெள்ளைக் காகிதத்தில்
ஒற்றை வரிக் கவிதை
காதலியின் பெயர்!

பூ

பறிக்க மனமில்லை
அழகாய் மலர்ந்தும்
விதைத்தது அவள்!

கடல்

நதிகள்
இணைந்து அமைத்த
மெகா கூட்டணி
"கடல்".

சிசு

விளையும் பயிர்
முளையிலே
தெரிந்தது
"ஸ்கேன்"

ஆடை

ஏக்கத்துடன் பார்த்தாள்,
ஏழைப்பெண்
கோவிலில் அம்மனுக்கு
அழகான பட்டுப் புடவை!

சிறை

பறவை கூண்டில்.
புள்ளிமான் வலையில்.
மழலை பள்ளியில்!.

வானவில்

ஆகாயத்தின்
சேவைக்காக
ஆண்டவன்
போர்த்திய
அழகுப்
பொன்னாடை
வானவில்!

சுமை

மூட்டை தூக்குவதற்காக
வெட்கப் படவில்லை!
நத்தைகள்!

அழகு

மஞ்சள் காமாலையுமில்லை
மஞ்சக் குளிக்கவுமில்லை
ஆனாலும் மஞ்சள் முகம்
பௌர்ணமி நிலா!

பசி

ஊரில் சாவு
இன்று நிறையும்
வெட்டியான்வயிறு

ஆயுள் ரேகை


ஜோதிடன் தடுமாறினான்
உழைப்பாளியின் கைகளில்,
அழிந்துபோனஆயுள்ரேகை

சட்டம்

எல்லோரும் வாழ
ஏற்றமிகு திட்டம்
அடிக்கல்லில்!

குழந்தை

வண்ணத்துப் பூச்சி
அடம் பிடிக்கும் குழந்தை
வேறுபக்கம் பறக்கமாட்டாயா

Post a Comment (0)
Previous Post Next Post