என்னவள் - புலி - சிவந்த கடல்

என்னவள்

இரா உணவு முடித்து
துப்பட்டிக்குள் தஞ்சம் புகுந்து
துயில் விழையும் வேளையில்
தூங்க விட மறுக்கிறாய்

எத்தனையோ நினைத்திருந்தேன்
என்னவென்று மறந்தே போனேன்
எப்போதும் உன் நினைவால்
என் கனவெல்லாம் கலைந்தே போனேன்

கண் மூடித் தூங்கும்போது
காதுக்குள்ளே ரீங்காரமிடுகிறாய்
கால் சதையைக் கடித்து
கதண்டு கதண்டாய் வீங்க வைக்கிறாய்

ஏய்... இரக்கமற்ற கொசுவே
என்னை முழுவதுமாய்த் தந்துவிட்டேன்
என்னவளை மட்டுமாவது உறங்கவிடு!

புலி

அவன் என்னை விட்டுப் போய்விட்டான்
சிறுத்தையாக நான் இருந்தபோது
என்னுடன் பழகியவன்
எனது புள்ளிகள் கோடுகளாக வழிந்து
நான் புலியாக மாறியவுடன்
என்னை விட்டுப் போய்விட்டான்

புலி ஒரு அரசியல் விலங்கு
அதிலும் தமிழ் விலங்கு என்றவுடன்
என்னை விட்டுப் போய்விட்டான்

எனது கோடுகள் வளர்ந்து கம்பிகளாகிவிட
நான் கூண்டுக்குள் இருக்கிறேன்
கூண்டாகவும் இருக்கிறேன்

மூன்றுமுறை தப்பித்தேன்
நடுக்கடலில் சுடப்பட்டேன்
ஒவ்வொரு முறையும் செத்துப் பிழைத்தேன்
என் கனவில் விரியும் தென்புலக் கடலில்

அவனுக்கும் எனக்குமிடையே ஒரு கடல்
கொஞ்சம் சொற்கள்
நிறைய ஆயுதங்கள் மற்றும்
மக்கிப்போன பழைய முத்தங்கள்.

சிவந்த கடல்

கடல் வெளியில் நடக்கிறேன்
சுற்றிய நரம்பு வலைகளுக்குள்
மிருதுவான உடல்
களைத்துறங்கும் இரவுகளில்
கெட்ட கனவுத் தசைகளை
பல மீன்கள் கவ்வுகின்றன
உதறி எடுத்துக் கைகளை அசைக்க முயல்கிறேன்
யாரோ ஒருவன் அதனை
வெட்டி எடுத்துக்கொண்டு போய்விட்டிருக்கிறான்
இருந்த இடததிலேயே உழல்கிறேன்
காயம்பட்ட புண்ணிலிருந்து ரத்தம் கசிகிறது
சிவந்த கடலலையில் ரத்தக் கவிச்சி
பெருத்த உடல் தளர்த்துகிறது
படபடப்பு குறைந்த இதயம்
சாவுக்குக் காத்திருந்தவர்கள் துரத்தி வருகின்றனர்
தாரை தப்பட்டையுடன்
கண்கள் இருட்டிக் கடல் வெளி மறைகிறது
சிதிலமான உடலில்
மூடாத கண்களுடன்
ஆழ்ந்த நித்திரையில்
ஈட்டியுடன் வருகிறாள்
வாய் மூடிக் கதறுகிறேன்

விலை

என்ன விலை
உயிரே.....
கோடை விடுமுறை
என் வீட்டிற்கு
உறவுக்காரர்கள்
வருகை தருவதாய் வந்த
தகவல் கடிதம் வாசித்தேன்...
குளிரடிக்காமலேயே
நடுங்கியது கோழிகள்!

சூரியன்

முன்னை விடவும்
மெலிந்திருக்கிறது சூரியன்
கவனிப்பாரற்று

சுயநலமிகள் அதன்பகலில்
இஷ்டத்திற்கு நிமிராது
புழங்கிக் கொண்டிருக்கிறார்கள்

வெப்ப வெண்மையில்
சாம்பல்நிறக் கொப்புளங்களானதில்
சிரங்குபிடித்த நாய்த்தோல் போல்
உதிர்த்து நகர்கிறது
கிழக்கிலிருந்து மேற்காக

சூரியச்சிரங்கைத் தின்ற
வெறியிலிருப்பவர்கள்
சொல்வதில்லை

முன்னைவிடவும்
மெலிந்திருக்கிறத சூரியன் என்று

அவர்களைப் பொறுத்தமட்டிலும்
தின்பதற்காகவே பகல்

பயணம்

வீட்டிற்குள் வேறிடமில்லாததால்
அவன் ஜன்னலோரம் உறங்கத் தொடங்குகிறான்
அதில் சாலை கருமையாக நீண்டு
சக்கரங்கள் ஓயாமல் உருண்டோடுகின்றன
அவன் மூடிய கண்களில்
பாய்ந்து வரும் வெளிச்சம்
பகலைப் போல் பிரகாசித்துக்கொண்டிருக்கிறது
தொடர்ச்சியாக எழும் ஓசை
கனமாக மேலேறிச் செல்கையில்
ஒவ்வொரு முறையும்
அவன் நசுங்கிக்கொண்டிருக்கிறான்
முதுகுக்குப் பின்னால் ஒலிப்பான்கள்
அடிக்குரலில் துரத்திக்கொண்டிருக்கின்றன
அவனைச் சாலையின் ஓரங்களுக்கு
தூக்கத்தில் நீளும் சாலையில்
எங்கும் நிற்காமல் களைப்புடன்
அவன் நடந்துகொண்டேயிருக்கிறான்
வாகனங்கள் மௌனமாக ஓடும்
சைகைகளை மொழியாகக் கொண்ட
உலகிலிருப்பதுபோல்
தினமும் கனவு காண்கிறான்
எப்போதாவது தோன்றும் அமைதியில்
திடுக்கிட்டு விழித்துப் பார்க்கையில்
அவன் உயிரோடிருப்பதை நினைத்து
மீண்டும் புரண்டு படுக்கிறான்.

நடை

நீண்டதொரு பிரபஞ்சவெளியில்
ஒற்றையடிப்பாதையினூடே
நடைபயணம்தான் வாய்த்ததெனக்கு

முன்பு சென்றவர்களையோ
பின்பு வருபவர்களையோ
அறிந்திருக்க வாய்க்கவில்லை

நிறங்கள் குறித்த
கவலையில்லை கால்களுக்கு

தேய்ந்த செருப்பின் காதறுந்து....
குப்புறக் கவிழ்ந்து...
மேடுபள்ளங்களைக் கடந்ததுண்டு

குயிலோ, கழுகோ
துணையோடு தொடர்ந்தபடி
தலைக்குக் கொஞ்சம்
நிழல் தந்தால்....

பயணம் முடியும்வரை
நடந்துகொண்டேயிருப்பேன்.

மேகம்

ஏன் அழுகிறாய்?
நீ தூது விட்ட
மேகங்கள்
பாதி வழியிலே
மழையாய்
கரைந்ததற்கா???

பூக்கள்

பூக்களும் கலப்புத்
திருமணம் செய்கின்றனவோ!
பிச்சியும்.... கனகாம்பரமும்
ஒரே நாரில்...
வெள்ளை நிறப் புடவையைத்
தந்த சமுதாயம்
தர மறுப்பதேனோ?
தனக்கு மனம் தரும்
பூக்களுக்கு மரணத்தைக்
கொடுப்பவர்கள்
பெண்கள்!

காதல் உண்டு!

காற்றுக்கும் காதல் உண்டு
இலைகளின் மேல்!
நிலவுக்கும் காதல் உண்டு
வானத்தின் மேல்!
பனித்துளிக்கும் காதல் உண்டு!
புற்கள் மேல்!
வண்டுக்கும் காதல் உண்டு
மலர்களின் மேல்!
நண்பர்களுக்கும் காதல் உண்டு
நட்பின் மேல்!
எனக்கும் காதல் உண்டு
தமிழ்த்தாயே உன் மேல்!

வறட்சி

கவலையில்
ஆழ்ந்திருக்கையில்
மகன் வந்து கேட்டான்
"அம்மா,
ஏன் நிலா
நம்ம கிணத்துக்கு
வரல?"

ஆழிப் பேரலை

அலைகடலென அனைவரும்
எழுத முடியுமா இனிமேல்
பொதுக்கூட்ட சுவரொட்டியில்

கிளிஞ்சல் பொறுக்கிய
கடற்கரையில்
ஏன் பொறுக்க வைத்தார்
குழந்தைகளை?

எமனாய் வந்த கடலை
எதிர்கொண்ட பிறகு
எவனைப் புகழ்வது
கருணைக் கடலென்று?

எங்கு போய்க்
கரைப்பது கடலால் இறந்தவர்களின்
அஸ்தியை....

நன்றி: செம்பருத்தி இதழின் தமிழினி கட்டுரை

ஏன்....ஏன்...ஏன்?

நினைக்கிறேன் உன்னை மறக்கத்தான்
சந்திக்கிறேன் உன்னைப் பிரியத்தான்

நெருங்குகிறேன் உன்னை விட்டுவிலகத்தான்
சிந்திக்கிறேன் உன்னை நிந்திக்கத்தான்

பகலில் சூரியனும் குளிர்கிறான்
இரவில் சந்திரனும் காய்கிறான்

கார்காலத்தில் கடும் வெய்யில்
கோடை காலத்தில் கடும் குளிர்

பாலையெங்கும் புல்லாய்த் தெரிகிறது
மருதமெங்கும் மணலாய்த் தெரிகிறது

குறிஞ்சியெங்கும் குளமாய்த் தெரிகிறது
நெய்தலெங்கும் மலையாய்த் தெரிகிறது

நெய்யில் பாலைக் காண்கிறேன்
நூலில் பஞ்சைக் காண்கிறேன்

தேனில் பூவைக் காண்கிறேன்
நீரில் மேகத்தைக் காண்கிறேன்

என் விழியில் உன்னைக் காண்கிறேன்
உன் விழியில் என்னைக் காண்பேனா?

தோழியரே...தோழியரே!!

காலத்தின் கருவறையில்
கால்தடத்தைப் பதிக்க எண்ணும்
கவிஞைகளே(!?)..
நலமா, நீங்கள் நலமா!?

எந்தன் உணர்விற்குள் உறுத்தி நிற்கும்,
உங்கள் உள்ளம் துடைக்க சில கேள்வி!

எம் பண்பாட்டைக் காத்து நிற்க - இது
படை திரட்டும் ஒரு வேள்வி!

"பெண்மொழி" என்று சொல்லி - நீ
பெண்மையைப் படையல் வைப்பதா?

உன்மொழி படித்த பெண்ணே - உன்
எழுத்தைத் தள்ளி வைப்பதா?

காற்றினில் கலையும் மேகத்தை
காலத்தின் கருவறையில் ஏற்றி வைப்பதா?

இலக்கியத்தில் இடம்பிடிக்க - "பெண்மொழி"
இயல்பை நீ இழக்கலாமோ?

வரலாற்றைப் புரட்டிப் பார்...காந்தியோடு,
"கோட்சே"யும் இருப்பதுண்டு!

பெண்

பெண்கள் புரியாத புதிரல்ல
புரிந்து கொள்ளக் கூடிய
புதுக் கவிதைதான்.

தேய்பிறையை சந்திக்கும் நிலவல்ல
நிலையாய் விண்ணில் மின்னும்
விண்மீன்கள்! அவர்கள்.

பெண்கள் அடிமைகள் தான்
அதிகாரத்திற்கல்ல
அன்பிற்கு மட்டும்.

பெண்கள் கண்ணாடி அல்ல
ஆனால், நாட்டின் கண்கள்.

பெண்கள் புரியாத புதிரல்ல
புரிந்த கொள்ளக் கூடிய
புதுக் கவிதைதான்.

மரங்கள்

பார்த்த ஞாபங்கள்

கோடையில்
பழுத்த இலைகள் உதிர
வசந்தத்தை எதிர்நோக்கி
விண்ணைப் பார்த்து
விரைத்து நிற்கும்

கால இடைவெளியில்
நீரும் இன்றி
யாரும் கவனிப்பாருமின்றி
உயிரைக்
கெட்டியாய்ப் பிடித்தபடி
வேர்களைப் பற்றிக்கொண்டு
முரசறிவிக்கும்

நிழல்தரும் காலங்களில்
வந்து சென்ற
சின்னச்சின்ன உருவங்கள்கூட
இப்போது இல்லாதது நினைத்து
ஓவென்று அழும்

காற்றில் சிதறி
நம் கவனத்தைக் கைப்பற்றும்

பொதுவுடமை ஆகுமா
இனி மரங்கள்?

உழைப்பு

மேகத்தின் வியர்வை
கடல் சிப்பிக்குள்
விழுந்து முத்தாகிறது.

உழைப்பாளியின் வியர்வை
காலச் சிப்பிக்குள்
விழுந்து வாழ்வாகிறது.

பூஜையறை

பிளாஸ்டிக் மாவிலைத்
தோரணங்கள்
ஸ்டிக்கர் கோலங்கள்

"டப்பர் வேர் டப்பாவிலிருந்து
ஊற்றுகிறார்கள்
விளக்குக்கு எண்ணெய்
கடவுள் ஏன் கல்லானான்?
கேட்டான் கண்ணதாசன்...
கடவுள் ஏன் பிளாஸ்டிக்கானான்?
பார்த்துக்கொண்டிருக்கிறான் பழநிபாரதி.

நன்றி: ஆனந்த விகடன்.

மூச்சு

பெருமைப்பட ஒன்றுமில்லை.
சுவாசிப்பதைப் பற்றிச்
சிலாகித்துச் சொல்ல
என்ன இருக்கிறது.

பனிக்காலம்

கொழுந்துகளைக் கருக்கி
தின்னத் துவங்கிவிட்டது
பனிக்காலம்.

தேயிலைக் காடுகளின் எந்தத்
தொங்கலிலும்
தொழிலாளர்கள் இல்லை.

ஓந்திகளில் தெரியும்
தேயிலை மூடுகளில் இடுப்புத் தாட்டுகள்
தூங்குகின்றன.

மான்களையோ
முயல்களையோ தேடி
அலையக்கூடும் அவர்கள்.

வழக்கம்போல தொழிற்சாலையிலிருந்து
மின்சாரக் கொம்பு ஓங்கி
மலைகளை அறைகிறது.

Post a Comment (0)
Previous Post Next Post