கனவாகிடக் கூடாதா?
என்னால்
நினைத்து பார்க்க முடியவில்லை
நீயில்லாமல் நான் சந்திக்கும்
இந்த துயர நாட்களை
ஒரு சில நாட்கள் தான்
உன்னுடன் பேசவில்லை
இதர நாட்களில்
நாம் பேசவில்லையே என்ற
என் தயக்கமே
இந்த இடைவெளிக்கு
காரணமாகிவிட்டது
இன்று என்
ஒவ்வொரு நொடியிலும்
அதற்க்கான விளக்கம்
அளித்துக் கொண்டிருக்கிறேன்
நீ கேட்கப் போவதில்லை
என்று தெரிந்தும்
நீ என்னுடன்
இருக்கும் வரை
என்னை விட்டு உன்னால்
எங்கே சென்று விடமுடியும்
என்ற என் நம்பிக்கையின்
அலட்சியமாக இருந்தேன்
இன்று
என்னிடமே நீ சொல்லாமல்
சென்று விட்ட பிறகுதான்
காலம் கடந்துவிட்டதை
அறிந்து துடிக்கிறேன்
நான் காணாத
ஓர் கனவாகிடக் கூடாதா?
நீ என்னைக் கடந்து போனது..!!!!
மறக்க நினைத்தாலும்..!!!
நீ வேறு, நான் வேறல்ல
என்பதாய் வளர்ந்தது
நம் நட்பு
நினைத்துக் கூட
பார்க்கவில்லை
நீ என்னை
பிரிவாய்யென்று
என்னை நீ
மறந்ததை நினைத்து
துடித்துப் போகிறேன்!
எதை நினைப்பேன்
எதை மறப்பேன்
நான் உன்னை
சந்திக்காமலே
இருந்திருக்கலாம்
என் உயிரையும் தாண்டி
சென்று விட்டது
உன் நினைவுகள்
உன்னை மறப்பதா
என்னையே மறப்பதா
முடிவெடுக்க முடியாமல்
தவிக்கிறேன்
உன்னை மறக்க நினைத்தால்
என்னையே மறக்க செய்கிறது
உன் நினைவுகள்
என் உயிரை விட மேலானது.!!!!
என் உயிரின் ஒவ்வொரு துளியில்
கண்ணீராய் வாழும் என் உயிரே
ஏன் என்னை வெறுக்குறாய்
நான் மௌனமாய் திரும்பி அழுகிறேன்
எனக்கு வேறொன்றும் செய்வதற்கில்லை
என்னை நீ எப்படி வேண்டுமானாலும்
வெறுத்துக்கொள்
ஆனால் என் இதயம் தொடும்
தூரத்திலேயே இரு
எனக்குள் உன் அன்பை
ஆழமாக புதைத்தவள் நீதானே
நெஞ்சில் எனக்கான அத்தனை
அன்பையும் வைத்துக்கொண்டு
வெறுப்பதாய் ஏன் உதடுகளால் நடிக்கிறாய்
உன் மீதான என் அன்பு என்பது
என் உயிரை விட மேலானது
என்பது உனக்கு தெரியாதா?
சித்தனும் பித்தனும் இயற்கை!
பிரபஞ்சத்தின் நிர்வாணத்திற்கு
பசுமையில் கட்டிய பட்டாடை;
மரமும் செடியுமென் சாதியென்றுணர்த்திய
உந்து சக்தி; உயிர்நாடி இயற்கை!
ஆழ்கடல் சூழ்ந்த சூழ்சுமம்
உலகை அள்ளிப் பருகிடாத கொடை;
சுடும் நெருப்பு - சுட்டெரிக்கும் சூரியன்
கடும் பல நட்சத்திரங்களை தாண்டி
பூமி வெளிச்சம் பெற்றிருப்பது இயற்கை;
ஆலகால விசமும் பூக்கும்
அடித்துத் தின்ன விளங்கும் பிறக்கும்
இடையே மனிதன் பிறந்து -
மனிதம் நிலைப்பதே இயற்கை;
கண்முன் வாழும் மனிதனறியா யதார்த்தம்
கோபம் வந்தால் கடலுடைத்து
நிலம் பிளந்து
எரிமலை வெடித்து
காற்றை புயலாக்க; மழையை வெள்ளமாக்கி
மனிதனுக்கு தன் இருப்பை நினைவுறுத்தி
பூவிற்குள் ஒளிந்திருக்கும் சூரிய சந்திர
நாயகன் நாயகி;
கல்லை வடித்து சாமி என்றாலும்
கேட்டதை கொடுத்து -
கொடுத்ததை அழிக்கவும் அறிந்த
சித்தனும் பித்தனும் இயற்கை!
மரணப்பார்வை..!
ஏய் மரணமே!
நீ என்னை
தீண்டும் முன்
தாண்டிவிடுவேன் என்
வாழ்க்கைக்கான
வெற்றியின் தூரத்தை!
இருப்பினும்
உன்னை நான்
அதிகமாய் நேசிக்கிறேன்,
இப்பூமியின் மாந்தர்கள்
அனைவரையும் நீ
ஒன்றாய் கருதுவதால்...
தொலைபேசி
நிறைய இதயங்கள்
இங்கு தான் உறைகின்றன்
உலகின் தூரங்களை ஒரு
சின்ன பொத்தான்களில் சுருக்கிவிடுகிறது
தொலைபேசி!
காதல் பேசியும்
அரசியல் தகவலறிவித்தும்
குடும்ப விவாதம் பகிர்ந்தும் வீட்டின்
ஐந்தாம் சுவராய் அவசியப்பட்டுப் போனது
தொலைபேசி!
கால வேகத்திற்கு
கையில் அடங்கி போய்
உலக விஸ்த்தாரிப்பை
ஒரு சொடுக்கலில் அறிவித்த்
மொபைல் ஃபோனாகவும் பிறந்தாலும்
அலைபேசியென அர்த்தம் கொண்டுவிட்டதில் -
தொலைபேசிக்கே பெருமை!
குழி
அவள்
என்னைப் பார்த்துச்
சிரித்தாள்
கன்னத்தில் குழி
விழுந்தது
நான் அவளைப் பார்த்துச்
சிரித்தேன்
வாழ்க்கையே
குழியில் விழுந்தது.
உழைப்பின் உயர்வு!
தாஜ்மஹாலைக் காணுகையில்
சிந்தையில் உதிப்பது ஷாஜஹானல்ல!
உழைப்பாளியே உனது
உன்னதமான உழைப்புத்தான்!
கோவில்களைக் காணுகையில்
கடவுளர் தெரிவதில்லை.......
சிற்பிகளின் உழைப்புத்தான்
சிந்தையில் உதிக்கிறது!
சோறு நான் உண்கையிலே
சம்சாரத்தை நினைப்பதில்லை....
விவசாயியே உந்தன்
வியர்வைதான் நினைவுக்கு வருகிறது!
ஆடை அணிந்திருக்கும்
ஆள் எனக்குத் தெரிவதில்லை....
நெசவாளியே நீதான்
தெரிகிறாய் என் சிந்தைக்கு!
ஒவ்வொன்றிலும் தெரிவது
உழைப்பின் உயர்வே!
தொ(ல்)லைகாட்சிப்பெட்டி
பணக்காரர்களிடம் மட்டும்
இருந்தது அன்று.
ஏழைகளிடம் குடிசையிலும்
இருக்கின்றது இன்று
நடுத்தர குடும்பத்திலோ
சொந்தமாக வாங்கியது ஒன்று
அரசாங்கம் தந்தது ஒன்று
பிரித்துக் கொண்டனர்.
பெரியவர்கள் பார்க்க ஒன்று
சிறியவர்கள் பார்க்க ஒன்று
வக்கிரம் வளர்க்கும் தொடருக்கு
அடிமையானது ஒரு கூட்டம்.
பாலுணர்வை ஊட்டும் பாடலுக்கு
அடிமையானது ஒரு கூட்டம்.
கேலி பேசும் நகைச்சுவைக்கு
அடிமையானது ஒரு கூட்டம்..
வன்முறை போதிக்கும் திரைப்படத்திற்கு
அடிமையானது ஒரு கூட்டம்.
அடிமைகள் பலவிதம்.
சிந்திக்க, செயல்பட, படிக்க, எழுத
மறந்து சோம்பேறிகள் பெருகினர்.
பரிசுப்போட்டி அறிவித்து விட்டார்கள்.
பாவம் இனி தமிழன்
இமைக்க மறந்து
தொடர்கள்பார்ப்பான்
கண்டு கொண்டேன்
கடவுளைத் தேடித் தேடி
தேய்ந்து போனது
கால்கள்!
காண முடியாமல்
காய்ந்து போயின
கண்கள்!
இறுதியில்
இமைகளை
மூடிக் கொண்டு
தேடினேன்!
ஞானம் பிறந்தது...
பத்து மாதங்களாய்
கருவறையில் காத்து
பெற்று வளர்த்த
தாயே கடவுள்..!
துணிவே துணை
கலங்கி நின்றால்
கண்ணில் விழும்
தூசி கூட துயரம்!
துணிந்து விடு
தூணே விழுந்தாலும் தூசி!
பொருத்தம்
பத்து பொருத்தமும்
சரி..!
ஆனாலும்
பெண் பிடிக்கவில்லை..!
சொத்து பொருத்தம் சரியில்லை..!
முடிச்சுக்கள்
எமன் கைகளில்
இருந்தா எறிப்படுறது?
பாசக்கயிறுகளாய்
வீசப்படும் ஒவ்வொரு
முடிச்சிலும்
எனது உணர்வுகள்
இறுக்கப்படுகிறது
வலியில் இருந்து
விலகும் அவசரத்தில்
தொலைந்து போகிறது
எனது சித்தம்
ஒவ்வொரு முடிச்சுகளாய்
மூச்சிரைக்க
அவிழ்க்கும் அறுக்கும்
கணங்களையும்
பயன்படுத்தி
எறியப்படும்
புதிய முடிச்சுக்கள்
அகோரமாய்ச்
சிரிக்கின்றன
வலுவிழந்து தொய்ந்த
என் கைகளில்
விழுந்திழுக்கிறது
ஒரு கொடும்பாறை
என் வளையல்கள்
நொருங்கி
கொட்டிக்கிடக்கிறது
கிழிந்து கழன்ற
என் புடைவைக்கருகில்
அவையள்ளி நிமிர்கையிலே
நிற்கிறாய் நீ
நீ எறிந்த
வார்த்தைக்கயிறுகளும்
மயான அமைதியும்
அறுந்து கிடக்கிறது
எம்மைச்சுற்றி
உன் முகத்தில்
தெறிக்கும்
திருப்தியில்...
எந்த வார்த்தையும்
சிந்திவிடாமல்
உன்னையும் தாண்டி...
பயணப்படும்
எனது வாழ்க்கை...
குற்ற உணர்வுகளை
இனியாவது தொலைக்கட்டும்.
இறுதி ஆசை...
அவள் சூடி வீசியெறிந்த
வாடிய பூக்களை
சேகரித்து வைத்திருக்கிறேன்,
என் இறுதி ஊர்வலத்தில்
அதை மட்டும்
என் மீது வீசுங்கள்...
அவள் காலடிச் சுவடுபட்ட
மண்ணை சேகரித்து
வைத்திருக்கிறேன்,
அதனால் மட்டுமே
என் கல்லறைச்
சுவரை எழுப்புங்கள்...
அவள் விழிகளில்
தொடங்கிய என் காதல்,
அவள் பாதங்களிலேயே
முடியட்டும்.
பெண் குழந்தை
கண்ணின் மணி போல எனை
கருவறையில் காத்தவளே
பூமிக்கு நான் வந்தவுடன்
புலம்புவது ஏனம்மா?
பெண்ணென்ற கலக்கமா,
பெற்றவளே உன்நெஞ்சில்!
கள்ளமில்லா என் தாயே -உன்
உள்ளம் நினைப்பதென்ன...
நெல்லின் மணி கொண்டு
நெஞ்சை நிறுத்தவா...
கள்ளிப் பால் வார்த்து
கல்லறை படைக்கவா...
வேண்டாம் தாயே
விபரீத எண்ணம்
அள்ளி அணைக்க
மனமில்லையென்றால்
அரசுத் தொட்டிலில்
போட்டுவிடு..!
தனிமைப் பயணம்
என் வாலிப வானம்
அமாவாசையானது
நிலவு நீ இல்லாமல்..!
என் இதயப் படகு
தவிக்கிறது
துடுப்பு நீ இல்லாமல்!
என் இளமைச் சோலை
மணம் வீசவில்லை
மலர் நீ இல்லாமல்..!
என் வாழ்க்கைச் சாலை
வெறிச்சோடிக் கிடக்கிறது
வாகனம் நீ இல்லாமல்!
ஆம்! தொடர்கின்றது
என் தனிமைப் பயணம்
ஒரு கணம் ஒரு யுகமாய்
ஒவ்வொரு பொழுதும் சோகமாய்..!
முரண்பாடு
காட்டில் வாழும்
நரியின் முகத்தில்
விழித்தால்
நல்ல சகுனமாம்!
வீட்டில் இருக்கும் நாய்
ஊளையிட்டால் மட்டும்
அபசகுனமாம்!
சொல்லுவது வேறுயாருமல்ல
மனிதன்தான்!
பாசம்!
அன்னையர் தின
வாழ்த்து சொல்ல
கிளம்பினான்,
முதியோர் இல்லத்தில் இருந்த
அன்னையை தேடி
கோணல் மனசு
சொமாலிய சோகம்
கொசோவா கொடுமை
உகாண்டா பசி
உலகின்
பசித்த தேசங்களின் நிலைகளைக்
கேட்டு
படித்து
ஆராய்ந்து... ஆராய்ந்து
எல்லோரிடமும்
வாய் கிழிய பேசத்தான் செய்கிறேன்
வறுமை தீர்க்கும் வழி பற்றி!
கொஞ்சமும்
வெட்கப்பட்டதேயில்லை நான்
பயணப்பாதைகளில்
வற்றிய வயிறோடு கையேந்தும்
உயிர்களிடம்
உதடுப்பிதுக்கி நடக்க!
முற்றுப்புள்ளி
அலுக்கத் துவங்கிய
உன் உரையாடலில்
கிளை திரும்பும் பறவையென
வந்தமர்கிறது முற்றுப்புள்ளி
பின் வந்த
உன் சொற்களெல்லாம்
தெருநாயின் குட்டிகளைப் போல
சாலையில் திரியத் துவங்குகின்றன