மது மயக்கம் - பார்வை - இரவினில் பேசுகிறேன்

மது மயக்கம்

கை உதறும்
கால் பதறும்
வாய் குளறும்
வாசம் வரும்
ஆசை வரும்
அழுகை வரும்
தூக்கம் வரும்
துக்கம் வரும்
நாளை வரும்
நாணம் வரும்

பார்வை

என்னை
எதுவாகவோ இருக்கச் சொல்லி
எல்லோரும் வற்புறுத்துகிறார்கள்,
நான் என்னை
நட்சத்திரங்களில் காணாது போக
முயன்றுகொண்டிருக்கையில்

இரவினில் பேசுகிறேன்

ஒன்றாய் நூறாய்ப்
பல்கிப் பெருகி
புதிய கட்டுரையாய்
எனக்கே எதிரொலிக்கும்
பகலில் பேசிய
ஓரிரு வார்த்தைகளும்

மானிட அரிதார
மாக்களின் சர்ச்சையில்
மெளன விரதமாய்க்
கழியுமென் பகல்கள்

தோழிக்கும், தோழனுக்கும்
துரோகிக்கும், காதலிக்குமாய்
எத்தனைமுறை உரைத்துக் காட்டுவேன்
நான் அவனே தானென

பகல்களில் செத்து
உறக்கத்தில் உயிப்பதற்கே
இரவினை நாடுகின்றேன்

எண்ணச் சிதறல்கள்
ஒலியாய் வெடிக்க
விழித்துக் கொள்கின்றன
என் இரவுகள்

எங்கோ பார்த்த முகத்தோடும்
அதே கனிவோடும்
அதட்டல் தொனியோடும்

வெளிச்சத்தில் வீசிய
வார்த்தைகள் எல்லாம்
இருட்டில் மோதி
அவளிதழில் எதிரொலிக்க
ஏகாந்தத்தில் சுற்றித் திரிகிறோம்

உணர்ந்த ஸ்பரிசமாய்
அவளணைக்கையில்
இராக்கோழியை சேவல் எழுப்பும்

பிறந்தநாள்

புன்னகை தொலைந்து
சில மாதங்களாயிற்று.
இன்றேனும்
மலர்ந்திருக்கட்டும்
புன்னகை மறந்த இதழ்கள்.

நம் கனவுகள்

உடலின் அதிர்வுகளில்
நிரம்பி வழிகிறது
உனக்கென நான் எழுதிய
பாடல்.
என்னுள்ளிருந்து வெளியேறும்
வெப்பம் சலசலத்தோடும்
நீரோடையின் சாயலை கொண்டிருக்கிறது.
தீரா இசையின் கண்ணீரில்
நிறைகிறது யாக்கை.
அடர்குளிரடிக்கும்
கனத்த இரவில்
தனித்தனியே அழுது பிரிகின்றன
உதிர்ந்த நம் கனவுகள்.

ஒராயிரம் ரோஜாக்கள்

என்னை சுற்றிய
வெற்றிடமெங்கும்
சிறு சிறு பிம்பங்களாய்
நீ
உருமாறியிருக்கிறாய்.
ஒவ்வொரு பிம்பமும் உனது
வெவ்வேறு முகங்களை
அணிந்திருக்கிறது.
பைத்தியநிலை முற்றிய
ஒரு முகமும்
வெளிறிய புன்னகையோடு
ஒரு முகமும்
மர்மம் சூழ்ந்த
கறுப்புக்காடுகளை நினைவூட்டுகின்றன.
எதற்கென்று அறியாமல்
அழுதுகொண்டே இருக்கும்
ஒரு முகத்தில் மட்டும்
சிதறிக்கிடக்கின்றன
ஒராயிரம் ரோஜாக்கள்.

தனிமையின் இசையில்

தனிமையின் இசையில்
பிறக்கின்றன
சிறகுகளற்ற பறவைகள் சில.
அவை எழுப்பும்
ஒலிக்குள்ளிருந்து வெளியேறுகின்றன
வர்ணமிழந்த பட்டாம்பூச்சிகள்.
பழுப்பு நிறத்தில்
கடக்கும் மேகங்கள்
நட்சத்திரங்களை சுமந்துபோகின்றன.
ஒவ்வொரு தாளத்திற்கும்
தலையசைக்கின்றன
இரவுச்செடிகள்.
துயர்மிகுந்த இரவின் பாடலை
உட்கொண்டு அருகருகே
மரணிக்கின்றன
நமது நாளைகள்.

தொலைகடல்

விரல் பற்றும் தொலைவில்
எப்போதும் இருப்பதில்லை
உன் இருத்தல்.
கடிகார முள்ளில்
சிக்கித் துடிக்கும்
மீனாக
நம் ப்ரியங்கள்.
கனவுகளின் கறுப்புவெள்ளை
பிரதேசங்களெங்கும் பொழிகிறது
உன் குரல்மழை.
தூரத்திலிருந்தும்
அதே குறுநகையுடன்
எப்போதும் எனக்குள்
வசிக்கிறாய்
நீ.

நாய்க்குட்டி

ஓடிவந்து கால் சுற்றும் நாய்க்குட்டியின்

ப்ரியங்களை வெகு இயல்பாய்

மறுதலித்து செல்கிறாய்.

வலிகொண்ட அதன் ப்ரியங்கள்

உன்னை பின் தொடர்ந்து

அன்பை யாசிக்கிறது.

ஒரு குவளையில் பாலூற்றி

அதற்கு அளிக்கிறாய்.

கடமை முடிந்துவிட்ட

திருப்தியில் உறக்கத்தில் ஆழ்ந்துபோகிறாய்.

அன்றிலிருந்து மிருகமானது

ப்ரியங்கள் அறுந்த

நாய்க்குட்டி.

மின்னல் தாண்டவம்

இருளின் கற்பை மின்னலொன்று
இரு துண்டுகளாய் வெட்டி எறிய
முயன்று கொண்டிருக்கிறது.
உலகின் மிகப்பெரும் துளி
அலையின்றி மெளனித்துக் கிடக்கிறது.
சுவாசம் தொலைந்த காற்று
வீதியெங்கும் புலம்பித் திரிகிறது.
முறிந்து விழுகின்றன விருட்சங்கள்.
அங்குமிங்கும் பரிதவித்த
இருள்
யாருமற்ற மணல்வெளியில்
பொத்தென்று விழுந்தபிறகு
ஒளிக்கண்களை தீரத்துடன்
திறந்தேன்.

நட்சத்திராவின் பொம்மைகள்

கருமை நிற சிறகும்
அடர்வன இருளும்
தன்னுடலில் கொண்டிருந்த
பறவைபொம்மையிடம் அதன்
பெயரை கேட்டுக்கொண்டிருந்தாள்
நட்சத்திரா.
பதிலேதும் பேசாத பொம்மை
கண்களை மட்டும் சிமிட்டியது.
பதிலுக்கு இவளும்
கண்களை சிமிட்டினாள்.
அலகு திறந்து காகா என்றது
பொம்மை.
அதன் ஒரு காலை
உடைத்தவள் இப்போ உன்
பெயர் "கா" தானே என்கிறாள்.

படித்ததில் பிடித்தது

கிழிந்துபோன பழைய புத்தகம் அது..
அட்டையின் வசீகரத்தால்
வாசிக்கும் வெறியில் நீ..
விடைத்தாள் திருத்தும்
ஆசிரியரின் வேகத்தோடு
புரட்டுகிறாய் அதன் பக்கங்களை..
வேகத்தின் உக்கிரத்தில்
சாயம் இழந்து கொண்டிருந்தது
அதன் வண்ணங்கள்.
இறுதியாய்..
முடித்துவிட்டாய் நீ.
உன் கையோடு வந்துவிட்டது
முடிவை சுமந்திருந்த தாள்கள்.
இனி ஒருவரும்
வாசிக்க முடியாது
அவள் புத்தகத்தை.

என் வாழ்க்கை புத்தகத்தில்

என் வாழ்க்கை புத்தகத்தில்
உன் பெயர் எழுதிய தாள்களை
கிழித்து ஏறிய முயல்கிறேன்
இதர்காவது உதவி செய்.

குட்டி கதை

ஹே இங்க படியிலே உட்கார்ந்து
என்னடா பண்றே

ஓ, நீயா, ஹி ஒண்ணுமில்ல
ஒரு சின்ன கவிதை

ஓஹோ, நீ கவிதை எல்லாம் கூட எழுதுவியா?

ம்ம், இப்போ தான் இரண்டு நாளா
எங்க, காட்டு பார்க்கலாம்

அவள் கேட்க அவனும் கொடுத்தான்

கை மாறியது தாள்கள்
இடம் மாறியது இதயங்கள்.

வெற்றிடம்

உனக்கென்று மாற்றி வைத்த பொழுதுகளில்
நீயில்லை.

வட்டம்

இரவு போனதும்
நிலவும் போனது
பிரிவு போனதும்
நினைவும் போனது

நிலவு போனதும்
வானம் இருண்டது
நினைவு போனதும்
வாழ்க்கை இருண்டது

வானம் இருண்டதும்
இருள் சூழ்ந்தது
வாழ்க்கை இருந்ததும்
உன் புன்னகை சூழ்ந்தது

இருள் சூழ்ந்ததும்
உலகம் ஓய்ந்தது
புன்னகை சூழ்ந்ததும்
மனம் ஓய்ந்தது

உலகம் ஓய்ந்ததும்
இரவு போனது
மனம் ஓய்ந்ததும்
பிரிவும் போனது

கடிகாரம்

இரண்டு முட்கள் -
அவர்களுக்குள் ஒட்டப்பந்தயம்,
உனது அழைப்பு வந்ததும்
அவர்களுக்குள் கண்ணாமூச்சியாட்டம்.

இலை உதிர் காலம்

பசுமை நினைவுகள்
மறைந்தபின், பாரமான
உயிரற்ற தினங்களை
உதிரும் காலம்.
இது இலை உதிர் காலம் .

இறுதி வேண்டுகோள்

வாயலில் காவல் நிற்கும் காலனை
சற்று நேரம் காக்க விடு

இதற்கு தானடி இந்நாள்வரை காத்திருந்தேன்
என் கரம் ஒருமுறை பற்றி விடு
உலர்ந்த என் உதட்டில் முத்தமொன்று இட்டு விடு

இம்முறை உன்னை தொலைத்து விட்டேன்
சென்று வருகிறேன் விடை கொடு

கல்லூரி நாட்களுக்கு பிறகு

கடலில் அலை மோதவில்லை
காலையில் ஓர் காகம் கூட கரையவில்லை
காற்றடித்தும் - ஓர் இலையும் அசையவில்லை.
மௌனம்,
மனித மனத்தை பித்தாக்கும் மௌனம்.
ஏன் இந்த நிலை என்று சிந்தித்த பொழுது
புரிந்தது,
இன்று முதல் கல்லூரி இல்லை என்று....
சற்று பின்னோக்கி சென்றேன்
கல்லூரி சாலைகள் மலரால் பொதிந்தவை போலிருந்தது
சிரித்த முகங்கள் மனதில்
மின்னி மின்னி சென்றன,
ஆனந்தமாய் கழித்த பல
நிமிடங்கள் கார்மேகம் போல்
மனத்தை அலைக்கழித்தது,
துன்பமாய் தோன்றிய நாளெல்லாம்
இன்று ஆனந்தமாய் இருக்கிறது.,
கூத்தாடி கழித்த நிமிடங்களை
வாழ்நாளின் இறுதி வரை சுமந்து கொண்டு இருப்பேன்.,
என் ஆழ் மனத்தின் மூலயில்,
அவை என்றும் பசுமையாய் வாழ்ந்திருக்கும்.....

Post a Comment (0)
Previous Post Next Post