மரணம் தழுவும்
வேளையில்...
மீண்டும்!
கருவறையின் காரிருளை
மௌனம் தின்று
கொண்டிருக்கும்!
கதவடைத்த காதலில்
மிச்சமிருக்கும் கள்ளிப் பாலும்
காலியாகி விடும்!
ஒரு நிசப்தத்தின் பேரிரைச்சலில்
ஒலிக்குறிகள் ஊடுருவிச் செல்லும்!
பிணவாடையின் உள்ளடங்கிய ஊதுபத்தியில் ஊர்
பரப்பியிருக்கும்!
காய்ந்துவிட்ட உப்புக்கல்
வழிந்துவிட்ட கண்ணீரில்
கரைந்திருக்கும்!
பாதையில் கோலமிட்டு
மணம் பரப்பியிருந்த
மலர்களும் மடிந்திருக்கும்!
எரிதழல் தின்ற
சுடுகாடின் ஈரம் காய்ந்தப்பின்
சாம்பலைத் துளைத்த
புழுவின் புல்வெளிகளில்
நீண்டிருக்கும்!
மரணம்!